"அடுத்த போப் ஆண்டவர் நான் தான்" - டிரம்ப் நகைச்சுவை

5 hours ago 2

வாஷிங்டன்,

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21-ந் தேதி வாடிகனில் மரணம் அடைந்தார். அவரது உடல் கடந்த 21-ந் தேதி முதல் வாடிகன் புனித பீட்டர் பேராலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து போப் ஆண்டவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து அவரது உடல் 26-ந் தேதி ரோமில் அடக்கம் செய்யப்பட்டது. போப் பிரான்சிஸ் மறைவை தொடர்ந்து புதிய போப் யார்? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் எழுந்துள்ளது. இந்நிலையில் போப் பிரான்சிஸ் மறைவுக்குப் பிறகு வரும் 7ம் தேதி புதிய போப்பை தேர்வு செய்வதற்கான கர்தினால்களின் மாநாடு தொடங்க இருக்கிறது.

உலகம் முழுவதும் 252 கர்தினால்கள் உள்ள நிலையில், போப் ஆண்டவரை தேர்வு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதி படைத்த 80 வயதுக்கு உட்பட்டவர்கள் 135 பேர் ஆவர். அவர்கள் தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆக தேர்வு செய்வார்கள்.இதற்காக வாடிகன் சிஸ்டைன் சிற்றாலயத்தில் 7-ந் தேதி கூடி தங்களுக்குள்ளே இருந்து ஒருவரை புதிய போப் ஆண்டவராக தேர்வு செய்கிறார்கள். இது ஓரிரு நாளிலோ அல்லது வாரக்கணக்கிலோ நீளும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோமில் போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கலந்து கொண்டார். இந்நிலையில், புதிய போப் தேர்வு குறித்து நகைச்சுவையாகப் பேசியுள்ளார். கத்தோலிக்க திருச்சபையை யார் வழிநடத்த வேண்டும் என்பது குறித்த அவரது கருத்து கேட்கப்பட்டதற்கு டிரம்ப், "நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன்; அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும்" என்றார்.

மேலும் போப் பிரான்சிஸுக்குப் பதிலாக யார் இருக்க வேண்டும் என்று கேட்டபோது, பதில் அளித்த டிரம்ப், நியூயார்க் வெளியே இருக்கும் ஒரு கார்டினல் எங்களிடம் இருக்கிறார், அவர் மிகவும் நல்லவர், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம் இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article