
சென்னை அண்ணா நகரில் பிரபல கார் ஷோரூம் ஒன்று உள்ளது. இங்கு ஊழியராக வேலை பார்த்து வரும் ரமேஷ் என்பவருக்கு, அந்த நிறுவனம் ரூ.50 ஆயிரம் சம்பள பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது.
பலமுறை கேட்டும் சம்பள பாக்கி கிடைக்காததால் விரக்தி அடைந்த ரமேஷ், மாற்றி யோசிக்கத் தொடங்கினார். அப்போது, வாடிக்கையாளர் புதிதாக வாங்கிய கார் ஒன்றுக்கு, ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பதிவு எண் வாங்குவதற்காக கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. திடீரென அந்த காரை காணவில்லை.
உடனடியாக, நிறுவன மேலாளர், புதிய கார் மாயமானது குறித்து அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அந்த கார் பக்கத்து தெருவில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
யார் காரை இங்கு கொண்டு வந்து நிறுத்தியது என்று போலீசார் விசாரணை நடத்தியபோது, ஷோரூமில் வேலை பார்க்கும் ஊழியரான ரமேஷ் காரை திருடியது தெரியவந்தது. சம்பள பாக்கி ரூ.50 ஆயிரத்தை தராததால் காரை திருடியதாக போலீசாரிடம் அவர் ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.