
சென்னை,
இலங்கையில் வசிக்கும் சசிகுமார் அங்கு நிலவும் கடும் விலைவாசி உயர்வை தாங்கமுடியாமல் தனது மனைவி சிம்ரன் மற்றும் மகன்களுடன் சட்டவிரோதமாக கடல் வழியாக கன்னியாகுமரிக்கு வருகிறார்.
போலீசாரிடம் சிக்கும் அவர்கள், சென்டிமெண்டாக பேசி 'எஸ்கேப்' ஆகிவிடுகிறார்கள். சசிகுமார் குடும்பத்துக்கு சென்னையில் வசித்து வரும் சிம்ரனின் அண்ணனான யோகிபாபு உதவி செய்கிறார். கேரளாவை சேர்ந்தவர்கள் என்று பொய்சொல்லி வாடகை வீட்டில் தங்க வைக்கிறார்.
சசிகுமாரின் நடவடிக்கை பிடித்து போக அக்கம் பக்கத்தினர் அனைவரும் அன்பு பாராட்டுகிறார்கள். இதற்கிடையில் ராமேஸ்வரத்தில் நடந்த ஒரு குண்டு வெடிப்புக்கு சசிகுமார் குடும்பம்தான் காரணம் என்று கூறி போலீஸ் படை சென்னை வருகிறது. அதேவேளை சசிகுமார் குடும்பம் இலங்கையை சேர்ந்தவர்கள் என்ற உண்மை குடியிருப்புவாசிகளுக்கு தெரியவருகிறது.
சசிகுமார் குடும்பத்தை போலீசார் பிடித்தார்களா? இலங்கைவாசிகளான சசிகுமார் குடும்பத்தின் கதி என்ன? என்பதே மீதி கதை.

சசிகுமார் இயல்பான நடிப்பால் கவருகிறார். தன்னிடம் பேசாமல் இருக்கும் மகனை சமாளிக்க போராடும் காட்சிகளில் உணர்வை கொட்டியுள்ளார். ஆனந்தம், சோகம் என இரு தளங்களில் அவரது நடிப்பு பளிச்சிடுகிறது. அழகான குடும்பத்தலைவியாக சிம்ரன் வசீகரிக்கிறார். 'ஓம்' என்று அவர் சொல்லும் ஒவ்வொரு இடமும் அழகு.
மூத்த மகனாக வரும் மிதுன் நடிப்பில் எதார்த்தம் தெரிகிறது. சிறுவனாக வரும் கமலேஷ் செய்யும் சேட்டை ரசிக்க வைக்கிறது. யோகிபாபுவின் 'டைமிங் காமெடி' கைகொடுத்திருக்கிறது.
எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள், யோகலட்சுமி என அனைவருமே நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். வயதான தம்பதியாக வரும் இளங்கோ குமரவேல் - ஸ்ரீஜா ரவியின் நடிப்பு உயிர்ப்பு.
அரவிந்த் விஸ்வநாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரம்யம். ஷான் ரோல்டனின் இசை வருடுகிறது. 'முகைமழை...' பாடலுக்கு 'ஒன்ஸ்மோர்' சொல்லலாம்.
கதாபாத்திரங்களின் எதார்த்தமான நடிப்பு பலம். துக்க வீட்டில் புது உறவுகள் முளைக்கும் காட்சி நெகிழ்ச்சி. சசிகுமார் குடும்பம் சட்டவிரோதமாக நாடு தாண்டி வர சொல்லப்படும் காரணங்கள் ஒட்டவில்லை.
'அகதிகள்போல வரும் மக்களுக்கும் அன்பு உண்டு' என்பதை உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளை உள்ளடக்கி நேர்த்தியான திரைக்கதை நடையில் எழுதி கவனிக்க வைத்துள்ளார், அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்.