
ஐதராபாத்,
ஜெர்மனியை சேர்ந்த 22 வயதான இளம்பெண் சுற்றுலா பயணி கடந்த மாதம் 4ம் தேதி தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு வந்துள்ளார். அந்த இளம்பெண் மற்றொரு சுற்றுலா பயணியுடன் ஐதராபாத்திற்கு வந்துள்ளார்.
கடந்த சில நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அப்பெண், மற்றொரு சுற்றுலா பயணியுடன் நேற்று ஐதராபாத்தில் உள்ள தனது நண்பரை சந்திக்க சென்றுள்ளார். இருவரும் டாக்சியில் மமிடிபள்ளி நோக்கி சென்றுள்ளனர்.
ஆனால், அந்த இளம்பெண்ணுடன் வந்த நண்பர் மமிடிபள்ளி செல்லும்முன் மற்றொருவரை சந்திக்க பாதிவழியில் இறங்கியுள்ளார். இதையடுத்து, அந்த இளம்பெண் டாக்சியில் தனியே சென்றுள்ளார்.
மாலை 7.30 மணியளவில் மமிடிபள்ளி அருகே ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு டிரைவர் காரை ஓட்டி சென்றுள்ளார். புகைப்படங்கள் எடுக்க அழகான இடங்கள் இருப்பதாக கூறி இளம்பெண் சுற்றுலா பயணியை காரை டிரைவர் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது, ஆள்நடமாட்டமற்ற பகுதியில் காரை நிறுத்திய அந்த டிரைவர், பெண் சுற்றுலா பயணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி கூச்சலிடவே கார் டிரைவர் அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட இளம்பெண் நடந்த சம்பவம் குறித்து தனது நண்பரிடம் தெரிவித்துள்ளார். பின்னர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியை காரில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த டாக்சி டிரைவரை கைது செய்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.