தெருவை கண்டு பிடித்து தருமாறு கலெக்டர் அலுவலகத்தில் ஜி.பி.முத்து புகார்

3 hours ago 2

தூத்துக்குடி,

டிக்டாக் மூலம் பிரபலம் அடைந்தவர் ஜி.பி.முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜி.பி.முத்து தனது யதார்த்த பேச்சின் மூலம் மிக பிரபலம் அடைந்தார். நாளுக்கு நாள் இவரின் பாலோவர்கள் எண்ணிக்கை அதிகரித்து பல லட்சங்களை தாண்டியது. இதையொட்டி புகழின் உச்சிக்கு சென்ற ஜி.பி.முத்து சினிமாவில் அறிமுகமாகி நடிக்க தொடங்கினார். தனியார் நிகழ்ச்சிகள், திரைப்பட விழாக்கள், சின்னத்திரை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பிரபலங்களில் ஒருவராக வலம் வர தொடங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் இவரது புகழ் மேலும் அதிகரித்து சினிமா வாய்ப்புகள் வரிசையாக வரத்தொடங்கின.

நடிகர் ஜி.பி.முத்து தனது குடும்பத்தினருடன் இன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்திற்கு தனது மனைவியுடன் வந்து மனு அளித்தார். அந்த மனுவில், 'உடன்குடி பெருமாள்புரத்தில் நத்தம் சர்வே எண் 233-ல் கீழ தெரு இருந்தது. அந்த இடம் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலம். பொதுமக்கள் அந்த பாதையை பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 20 வருடத்தில் அந்த தெரு காணாமல் போய்விட்டது' என்று அவர் கூறியுள்ளார்.

'சிட்டிசன் படத்தில் அத்திப்பட்டி கிராமம் காணாமல் போனது போன்று, இந்த தெருவும் காணாமல் போய்விட்டது' என்று ஜி.பி.முத்து தெரிவித்துள்ளார். அந்த தெரு இருந்த இடத்தை தனி நபர்கள் ஆக்கிரமித்து விட்டதால், பொதுமக்களின் பாதை அடைக்கப்பட்டு உள்ளது. எனவே, அந்த இடத்தை அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், 'மேற்படி இடத்தை நில அளவை செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உடன்குடி பெருமாள் புரத்தில் காணாமல் போன கீழதெருவை கண்டுபிடித்து தருமாறு' கலெக்டரிடம் ஜி.பி.முத்து கோரிக்கை வைத்துள்ளார் . இந்த பிரச்சனைக்கு தீர்வு காணாவிட்டால், கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க போவதாக ஜி.பி.முத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். 

Read Entire Article