ஈரோடு, ஜன.25: காஞ்சிக்கோவிலில் தெரு நாய்கள் கடித்து பலியான 10க்கும் மேற்பட்ட ஆடுகளையும், கோழிகளையும் சாலையில் போட்டு இழப்பீடு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு அடுத்த காஞ்சிக்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விவசாயிகள் வளர்த்து வரும் ஆடு, கோழிகளை வெறி பிடித்த தெரு நாய்கள் கடித்து கொன்று வந்தன. இந்நிலையில், காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு உட்பட்ட செங்காளிபாளையத்தில் ஆண்டமுத்து, வடிவேல், பழனி ஆகியோர் தோட்டத்தில் ஆடு, கோழிகளை வளர்த்து வந்தனர்.
இதில், நேற்று முன்தினம் இரவு வெறி பிடித்த தெரு நாய்கள் அடுத்தடுத்து மூவரின் தோட்டத்திற்குள் புகுந்து ஆடு, கோழிகளை கடித்து கொன்றன. ஆண்டமுத்துவின் ஒரு ஆடும், வடிவேல் வளர்த்த 5 கோழி, 2 ஆடுகளும், பழனி வளர்த்த 7 ஆடுகளும் பலியாகின. 5 ஆடுகள் கடிபட்டு உயிருக்கு போராடி வருகிறது. இந்த சம்பவத்தையடுத்து நேற்று காஞ்சிக்கோவில் நால் ரோடு சந்திப்பில் பலியான ஆடு, கோழிகளை சாலையில் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post தெரு நாய்கள் கடித்து பலியான ஆடு, கோழிகளை சாலையில் போட்டு போராட்டம் appeared first on Dinakaran.