டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது தேசத்திற்கான பின்னடைவு: திருமாவளவன் பேட்டி

2 hours ago 1


மதுரை: டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது தேசத்திற்காக பின்னடைவு என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து இன்று காலை மதுரை வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக முன்னிலை வகிப்பது மிகுந்த அதிர்ச்சியை தருகிறது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைவதை தேசத்திற்கான பின்னடைவாக கருத வேண்டும். இந்தியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. இது குறித்து கூட்டணி தலைவர்கள் தீவிரமாக கலந்தாய்வு செய்ய வேண்டும். ஈகோ பிரச்னைகளை பின்புறம் வைத்து, நாடு மற்றும் நாட்டு மக்களை காப்பாற்ற சிந்திக்க வேண்டும்.

இந்தியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, சட்டமன்ற தேர்தலிலும் இந்தியா கூட்டணி இணைந்து பணியாற்ற வேண்டும். டெல்லி தேர்தல் முடிவுகளை படிப்பினையாக கொண்டு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சிந்திக்க வேண்டும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றியை திமுக பெறும். திருப்பரங்குன்றத்தில் உள்ள பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனர். இங்கு வட மாநிலத்தைப் போல் மத பிரச்னையை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். இந்து சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அடிப்படை பிரச்னைகளுக்கு குரல் கொடுக்காத பாஜகவினர், இப்போது எதற்காக குரல் கொடுக்கிறார்கள் என சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

The post டெல்லியில் பாஜக ஆட்சி அமைவது தேசத்திற்கான பின்னடைவு: திருமாவளவன் பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article