தெய்வமே குற்றம் செய்யலாமா?

6 hours ago 2

சென்னை,

நமது பண்பாட்டில் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற போற்றத்தக்க சொற்றொடர் உண்டு. தாய்-தந்தை ஆகிய இருவருமே தங்கள் குழந்தைகளின் நற்குணங்களுக்கும், சீரிய கல்விக்கும், எதிர்காலத்துக்கும் ஆசிரியர்களையே நம்பியிருக்கிறார்கள். அத்தகைய ஆசிரியர் என்ற சொல் ஆசு+இரியர் என்று பிரிந்து பொருள்தரும். ஆசு என்றால் குற்றம் என்றும், இரியர் என்றால் கெடசெய்பவர் என்றும் பொருள்படும். மாணவர்களின் குற்றம், குறைகளை கெட செய்யும் ஆசிரியர்கள், தாங்கள் குற்றங்கள் செய்வதில் இருந்து விலகியே இருக்கவேண்டும்.

புனிதமான பணியை செய்யும் சில ஆசிரியர்கள் வேலியே பயிரை மேய்வதுபோல மாணவிகளிடம் பாலியல் பலாத்கார குற்றங்களில் ஈடுபடும் செய்திகள் இப்போது அடிக்கடி வருவது மனதை வருந்தச்செய்வதாக இருக்கிறது. கடந்த ஒரேவாரத்தில் மணப்பாறையில் தனியார் பள்ளியில் 2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4-ம் வகுப்பு மாணவி தன் குடும்பத்தினரிடம் தெரிவித்ததால்தான், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதுபோல புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள அரசு பள்ளியில் படிக்கும் 7 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 7 மாணவிகளும் மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமத்துக்கு புகார் கொடுத்த பிறகே கைது நடவடிக்கை பாய்ந்தது.

கோவையிலும் மாணவிகளிடம் முறை தவறி நடந்துகொண்டதாக அளிக்கப்பட்ட புகாரில் 57 வயதான ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து சங்கரன்கோவிலிலும் 8-ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கல்வி நிறுவனங்களில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நடைபெறாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் சில கடுமையான நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மட்டுமல்லாமல், குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதோடு, போக்சோ வழக்குகளில் தண்டனை பெறும் ஆசிரியர்களின் பள்ளி மற்றும் உயர்கல்வி சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பு நிச்சயமாக குற்றம்செய்யும் கருப்பு ஆடுகளுக்கு பயத்தை கொடுக்கும்.

தமிழக அரசு சமீபத்தில் நிறைவேற்றியுள்ள சட்டப்படி இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையின் அளவு ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றத்துக்கான தண்டனை மரண தண்டனையாக இருக்கிறது. ஆக கடும் தண்டனை விதிப்பதற்கேற்றவகையில் சட்டம் கையில் இருக்கிறது. ஆனால் இதுபோன்ற குற்றங்களில் கைது செய்யப்படுபவர்கள் மீதான விசாரணையை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, நீதிமன்றங்களிலும் விரைவாக வழக்கை நடத்தி தீர்ப்புகளை பெறவேண்டும். மேலும் மக்களின் மனதில் இருந்து நீங்குவதற்குள் தண்டனையும் வழங்கப்பட்டால் மட்டுமே அவை மீண்டும் நடக்காமல் இருப்பதோடு, அதை செய்ய நினைப்பவர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தும்.

குழந்தைகளுக்கும் நல்லதொடுதல் எது? கெட்டதொடுதல் எது? என்பதை சொல்லிக்கொடுக்கவேண்டும். ஆசிரியர்களுக்கும் அவ்வப்போது புத்தாக்க பயிற்சிகளை நடத்தி உளவியல் ரீதியான அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும். அரசின் வழிமுறைகளையும், புதிய சட்டத்தையும் முறைப்படி நிறைவேற்றினாலே போதும். ஆசிரியர் சங்கங்களும் ஆசிரியர்களின் உரிமைகளுக்கு போராடுவதுபோல, தங்களிடம் படிக்கும் பிஞ்சு மலர்களான மாணவிகளிடம் முறை தவறி நடக்கக்கூடாது என்பதையும் ஆசிரியர்களுக்கு அறிவுரையாக கூறவேண்டும்.

Read Entire Article