
சென்னை,
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் அனைவருக்கும் முழுமையான சமூகநீதி வழங்குவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே மேற்கொள்ள வேண்டும் என்ற முழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதை கண்டும் காணாமலும் திமுக அரசு நாடகமாடிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டின் சமூகநீதி சார்ந்த விவகாரத்தில் திமுக கடைபிடித்து வரும் இத்தகைய அணுகுமுறை கண்டிக்கத்தக்கது.
சமூகநீதியைக் காக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதை திமுக அரசு கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அதை நடத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டும் தான் உண்டு; தமிழக அரசுக்கு கிடையாது என்று கூறி பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இதன்மூலம் தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை திமுக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியே தீர வேண்டும் என்ற கட்டாயம் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்.
இந்தியாவில் பிகார், தெலுங்கானா, கர்நாடகம், ஒடிசா ஆகிய 4 மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றங்களோ எந்தவித தடையும் விதிக்கவில்லை என்பதால், தமிழகத்தில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த எந்தத் தடையும் இல்லை. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு தயங்குவது ஏன்?.
சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது கடினமான பணியல்ல. தமிழக அரசு நினைத்தால் அதன் பணியாளர்களைக் கொண்டு, ரூ.300 கோடியில் அடுத்த இரு மாதங்களில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி முடிக்க முடியும். இதை செய்ய தமிழக அரசை தடுப்பது எது? எனத்தெரியவில்லை. தமிழ்நாட்டை பாதிக்கும் மிக முக்கியமான சிக்கலில் நாட்டு மக்களின் உணர்வுகளை முழுமையாக அறிந்து கொள்ளாமலும், மதிக்காமலும் திமுக அரசு செயல்பட முடியாது.
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை அவர்களின் பிரதிநிதிகளான அரசியல் கட்சிகளின் வாயிலாக அறிந்து கொண்டு செயல்படுத்த வேண்டியது திமுக அரசின் கடமை. அதை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் மாநில அரசின் மூலம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.