
தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது, தமிழகம் அதை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று (திங்கட்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தென் மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை 20-ந்தேதியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.