
புலவாயோ,
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி புலவாயோவில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 24 ரன்னுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்த போதிலும் அடுத்து வந்த பொறுப்பு கேப்டன் வியான் முல்டெர் ஜிம்பாப்வே பந்து வீச்சை அடித்து நொறுக்கினார். அவருக்கு டேவிட் பெடிங்காம் (82 ரன்), டிரே பிரிட்டோரியஸ் (78 ரன்) நன்கு ஒத்துழைப்பு தந்தனர். அபாரமாக ஆடிய முல்டெர் 214 பந்துகளில் தனது முதலாவது இரட்டை சதத்தை நிறைவு செய்தார். அதன் பிறகும் அவரது ரன்வேட்டை நீடித்தது.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 465 ரன்கள் அடித்திருந்தது. முல்டெர் 264 ரன்களுடனும் (259 பந்து, 34 பவுண்டரி, 3 சிக்சர்), டிவால்ட் பிரேவிஸ் 15 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இந்த சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 114 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 626 ரன்கள் குவித்த நிலையில் டிக்ளேர் செய்தது. வியான் முல்டர் 367 ரன்களுடனும், கைல் வெர்ரைன் 42 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஜிம்பாப்வே அணி ஆரம்பம் முதலே தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறியது. அந்த அணியில் சீன் வில்லியம்ஸ் (83 ரன்கள்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் 43 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 170 ரன்களில் ஆல் அவுட் ஆகி பாலோ ஆன் ஆனது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் சுப்ரயென் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தற்போது ஜிம்பாப்வே அணி பாலோ ஆன அன நிலையில் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.