ஊட்டி: வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை.. மக்கள் அச்சம்

3 hours ago 1

நீலகிரி,

65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஊட்டியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் சிறுத்தைகள் வீட்டில் வளர்க்கும் நாய், பூனை உள்ளிட்ட செல்ல பிராணிகளை வேட்டையாடி செல்கின்றன.

இந்தநிலையில் ஊட்டி அடுத்த கெந்தொரை என்ற கிராமத்தில் வெள்ளை பூண்டு பயிரிடப்பட்டு இருந்த தோட்டத்தில் சிறுத்தை பதுங்கி நின்றது. பின்னர் அங்கு நாய் இருப்பதை கண்டு, அதை வேட்டையாட தயாரானது. பூண்டு செடிகளுக்கு மத்தியில் சிறுத்தையின் தலை மட்டும் வெளியே தெரிந்தது. பின்பு மெதுவாக வெளியே வந்த சிறுத்தை, நாயை வேட்டையாட வீட்டிற்குள் சென்றது. இதை பார்த்த வளர்ப்பு நாய் குரைத்ததால், நாயை வேட்டையாட முடியாமல் சிறுத்தை ஏமாற்றம் அடைந்தது.

பின்னர் சிறுத்தை மெதுவாக அங்கிருந்து நடந்து சென்றது. இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால் கிராம மக்கள் இடையே அச்சம் ஏற்பட்டு உள்ளது. எனவே, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

 

Read Entire Article