
தூத்துக்குடியை சேர்ந்த முதியவர் ஒருவருக்கு அவரது செல்போனில் தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் அதில் செல்போன் டவர் அமைத்தால் வருமானம் பெறலாம் என்றும் குறுஞ்செய்தி அனுப்பி, செல்போன் டவர் அமைப்பதற்கு ஆவண கட்டணம், பொருட்கள் செலவு, போக்குவரத்து கட்டணம், நியமன கட்டணம் போன்ற பல்வேறு காரணங்களை கூறி ரூ.40 லட்சத்து 21 ஆயிரத்து 950 பணத்தை மோசடி செய்த வழக்கில் தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு மோசடியில் ஈடுபட்ட குற்றவாளியான சென்னை அமிஞ்சிகரை பகுதியைச் சேர்ந்த சுப்பாராவ் மகன் முரளிகிருஷ்ணன் (வயது 51) என்பவரை கடந்த 25.3.2025 அன்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு மேற்சொன்ன மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் சில குற்றவாளிகளான தர்மபுரி தோழனூர் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் அருண்குமார்(27), விழுப்புரம் கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜவேல் மகன் ஆனந்த்(27), சேலம் பணங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த ஹரிராம் மகன் சந்தோஷ்ராஜ்(22) மற்றும் கள்ளக்குறிச்சி திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த கேசவன் மகன் அப்பாஸ்(25) ஆகிய 4 குற்றவாளிகளை நேற்று முன்தினம் (7.5.2025) சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நேற்று (8.5.2025) தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.