
மும்பை,
பாகிஸ்தான் இந்தியா மீது தாக்குதல் நடத்த முயற்சித்து வருகிறது. இதனை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. மேலும் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதலை நடத்தி வருகிறது. இதற்கு இந்தியா தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். இதனை தொடர்ந்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று வதந்தி பரவியது. இந்த தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்ட செய்தியில், "எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாது. பதற்றம் அடைய வேண்டாம். இந்தியா முழுவதும் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளது. அனைத்து விற்பனை நிலையங்களிலும் எரிபொருள், எரிவாயு உடனடியாக கிடைக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.