உச்சகட்ட போர்ப்பதற்றம்: பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ஒத்திவைப்பு

8 hours ago 2

ராவல்பிண்டி,

6 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 கிரிக்கெட் போட்டி கடந்த ஏப்ரல் 11-ந் தேதி தொடங்கி ராவல்பிண்டி, கராச்சி, முல்தான், லாகூர் ஆகிய 4 நகரங்களில் நடந்து வந்தது. வருகிற 18-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது.

இதில் ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடக்க இருந்த 27-வது லீக் ஆட்டத்தில் கராச்சி கிங்ஸ்-பெஷாவர் ஜால்மி அணிகள் மோத இருந்தன. ஆனால் பாதுகாப்பு அச்சத்தால் இந்த ஆட்டத்தை திட்டமிட்டபடி நடத்த முடியவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதிகள் முகாம் மீது துல்லிய தாக்குதல் நடத்தியது.

அத்துடன் பாகிஸ்தானில் பல இடங்களில் டிரோன் மூலம் தாக்குதல் தொடுக்கப்பட்டது. இதனால் அந்த நாட்டில் பதற்றம் நிலவுகிறது. ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில் நடந்த டிரோன் தாக்குதலில் கட்டிடம் சேதமடைந்ததுடன், சிலர் காயம் அடைந்தனர்.

இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், எல்லா அணி நிர்வாகத்துடன் அவசர ஆலோசனை நடத்தியது. இதன் முடிவில் இரவு நடக்க இருந்த லீக் ஆட்டத்தை மற்றொரு நாளுக்கு தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் பி.எஸ்.எல். தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிட்டது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த கோரிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் நிராகரித்தது.

இந்நிலையில் பி.எஸ்.எல். தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த தொடர் மீண்டும் எப்போது நடக்கும் என்பது குறித்த தகவல் எதுவும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article