'வங்கி சேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும்' - நிர்மலா சீதாராமன் உத்தரவு

8 hours ago 2

புதுடெல்லி,

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்த சூழலில் வங்கித்துறைகளின் செயல்பாடு குறித்து பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் தலைமை அதிகாரிகளுடன் மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய நிர்மலா சீதாராமன், எந்தவொரு நெருக்கடி அல்லது அசாதாரண சூழ்நிலையை கையாளும் வகையில் அனைத்து வங்கிகளும் தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

குடிமக்களுக்கும், வணிக நிறுவங்களுக்கும் வங்கி மற்றும் நிதி சேவைகள் எந்த இடையூறும் இன்றி தடையின்றி கிடைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். மேலும் மக்களுக்கு நேரடியாக வங்கி சேவையும், டிஜிட்டல் சேவைகளும் கிடைக்க செய்வதுடன், ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் இருக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

யு.பி.ஐ. மற்றும் இணையதள சேவைகள் தங்கு தடையின்றி தொடர வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், அசாதாரண சூழல்களை சமாளிப்பது குறித்த முன்னெச்சரிகை நடவடிக்கைகளை ஒத்திகை செய்து பார்க்க வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும் எல்லை பகுதிகளில் உள்ள வங்கி கிளைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்த நிர்மலா சீதாராமன், அவர்களின் பாதுகாப்பிற்காக பாதுகாப்பு அமைப்புகளுடன் வங்கிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Read Entire Article