
தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் மாரியப்பன் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
சுகாதாரத்துறையின் முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு உணவு பாதுகாப்புத் துறையின் முதன்மைச் செயலாளர், ஆணையர் லால்வேனா மற்றும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் ஆகியோரது ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் பேரில் இம்மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை சிறப்பாக செயல்பட்டுவருகின்றது. அதன் தொடர்ச்சியாக, கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில், தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலரான எனது உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சி பகுதி-1-ன் உணவு பாதுகாப்பு அலுவலர் அச்சுதராம், தூத்துக்குடி மாநகராட்சி அண்ணாநகர் 12-வது தெரு பகுதியில் உள்ள ஒரு வீட்டினை திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் மாடு வதைசெய்து, மாட்டிறைச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. மேலும், உரிய வெப்பநிலையில் பராமரிக்கப்படாமல் வைத்திருந்த 110 கிலோ பழைய மாட்டிறைச்சி கண்டறியப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டு, மாநகராட்சி உதவியுடன், கிருமிநாசினி தெளித்து, புதைத்து அழிக்கப்பட்டது. மேலும், உணவு பாதுகாப்பு உரிமம் பெறும் வரை, அந்த இறைச்சிக் கடையில் எவ்விதமான இறைச்சியும் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறைச்சி வியாபாரம் செய்வோர், மாநகராட்சி, நகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் வரையறுத்த இடங்களில் மட்டுமே ஆடு, மாடு, பன்றி போன்றவற்றை வதம் செய்ய வேண்டும்.
குடியிருக்கும் வீடுகளினுள் காலநடைகளை வதம் செய்து, இறைச்சி விற்பனை செய்ய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தில் அனுமதி இல்லை.
மேலும், மாடு அல்லது பன்றி போன்ற பெரிய விலங்குகளை வதம் செய்து, இறைச்சியாக விற்பனை செய்ய மாநகராட்சி, நகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகள் அல்லது காவல் துறையிடமிருந்து "தடையின்மைச் சான்று" அவசியம் வேண்டும். அச்சான்று இல்லாமல் உணவு பாதுகாப்பு உரிமம் வழங்கப்படமாட்டாது. உணவு பாதுகாப்பு உரிமமின்றி எவ்விதமான இறைச்சியும் விற்க கூடாது.
இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை:
உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமலோ அல்லது காலாவதியாகிய பின்னரோ இறைச்சி வணிகம் புரிவது என்பது சட்ட விதிமீறல் என்பதால், உணவு பாதுகாப்புத் துறையால் உரிமமின்றி செயல்படும் உணவு வணிக நிறுவனம், கடை மூடப்படும் என்பதுடன், வழக்கு பதிவு செய்து, 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து உணவு வணிகர்களும் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து, உணவு பாதுகாப்பு உரிமத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றால் மட்டும் போதாது. உணவு வணிக வளாகத்தினை உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் விதிமுறைகளைப் பின்பற்றி சுகாதாரமாக வைத்திடல் வேண்டும். தவறினால், கடும் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக நேரிடும் என்று எச்சரிக்கப்படுகின்றது.
நுகர்வோர்களும் இறைச்சி வாங்கும் போது, கடைக்கு FSSAI உரிம எண் உள்ளதா, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவற்றிற்கு உள்ளாட்சி அமைப்பிடம் உரிய தடையின்மைச் சான்று பெறப்பட்டுள்ளதா என்பதைக் கவனித்துப் பார்த்து வாங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
இறைச்சி உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரங்கள் குறைபாடு மற்றும் கடையின் சேவை குறைபாடுகள் குறித்து, நுகர்வோர்கள் புகாரளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety என்ற புகார் செயலி மூலமாகவோ அல்லது https://foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியங்கள் காக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.