தூத்துக்குடி: மழையால் சேதமடைந்த மகாகவி பாரதியார் இல்லத்தின் சீரமைப்பு பணிகள் தொடங்கின

3 days ago 1

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டு பெருமாள் கோவில் தெருவில், மகாகவி பாரதியார் பிறந்து வளர்ந்த இல்லம் உள்ளது. அரசால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த இல்லத்திற்கு பொதுமக்கள், சுற்றுலாவாக சென்று பார்வையிட வசதி செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர, பகுதி நேர நூலகம் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், பாரதியார் இல்லத்தின் முன் பகுதியான வரவேற்பாளர் பகுதியின் மேல்மாடியின் மேற்கூரை, சமீபத்தில் பெய்த மழையால் சேதமடைந்து இருந்தது. இந்த சூழலில், நேற்று திடீரென மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது. இதனால் கீழ்தளத்தின் மேற்கூரையும் இடிந்து, அதிலிருந்து கற்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் பாரதியார் இல்லத்தின் வரவேற்பு அறையில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்டவை சேதமடைந்தன.

இதன் தொடர்ச்சியாக சுற்றுலா பயணிகள் பார்வையிட முடியாத நிலை ஏற்பட்டது. அதனை சீர் செய்ய அரசுக்கு பொதுமக்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், மகாகவி பாரதியார் இல்லத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. அதன் பழமை மாறாமல் சீரமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த பணிகள் முடிவடைந்ததும், பொதுமக்கள் பார்வையிட திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Read Entire Article