
சென்னை,
ஐ.பி.எல். தொடரில் சென்னையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 196 ரன்கள் குவித்தது.
பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த சென்னை அணியினர், பெங்களூருவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 50 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் எடுத்தார். பெங்களூரு தரப்பில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்த ஆட்டத்தில் தோனி 16 பந்தில் 30 ரன்கள் எடுத்தார். அவர் 9வது இடத்தில் களம் இறங்கினார்.
சென்னை அணி தோல்வியை தழுவ தோனியும் ஒரு காரணம் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அவர் 6வது அல்லது 7வது இடத்தில் களம் இறங்கி இருந்தால் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும் என விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், அஸ்வினுக்கு முன்பாக தோனி களமிறங்கியிருக்க வேண்டும் என சி.எஸ்.கே முன்னாள் வீரரான ஷேன் வாட்சன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது, தோனி 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். இதை பார்க்கத்தான் ரசிகர்கள் வருகிறார்கள். தோனி இன்னமும் முன்னதாக களம் இறங்கினால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். எனது கருத்துபடி அஸ்வினுக்கு முன்பாக தோனி களமிறங்கியிருக்க வேண்டும்.
தோனி கூடுதலாக 15 பந்துகள் பிடித்திருக்க வேண்டும். கடைசி சில ஆண்டுகளாக தன்னால் நிலையாக விளையாட முடியும் என தோனி நிரூபித்து வருகிறார். தோனி முன்னதாக களமிறங்கினால் அவரது திறமையை அதிகமாக காட்ட முடியுமென நான் நம்புகிறேன்.
திரிபாதியை தொடக்க வீரராக களம் இறக்குவது அதிர்ச்சியாக உள்ளது. ருதுராஜ் சிறப்பான தொடக்க வீரர். தற்போதைக்கு சி.எஸ்.கே அணியில் சமநிலை இல்லை. தோனி விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாக உள்ளார். பேட்டிங்கில் அவரை முன்னதாக இறக்கியிருந்தால் போட்டியில் வென்றிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.