
சென்னை,
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 8-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரஜத் படிதார் 51 ரன்கள் அடித்தார். சென்னை தரப்பில் நூர் அகமது 3 விக்கெட்டுகளும், பதிரனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
பின்னர் 197 ரன்கள் இலக்கை துரத்திய சென்னை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 146 ரன்களே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் அடித்தார். பெங்களூரு தரப்பில் ஹேசில்வுட் 3 விக்கெட்டும், யாஷ் தயாள், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முன்னதாக இந்த ஆட்டத்தில் சென்னை அணியின் முன்னாள் கேப்டனான மகேந்திரசிங் தோனி, 9-வது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினார். அந்த வரிசையிலும் அதிரடியாக விளையாடிய அவர் 16 பந்துகளில் 30 ரன்கள் அடித்தார். இருப்பினும் அதிரடி பேட்ஸ்மேனான அவர், இப்படி அஸ்வினுக்கு பின் 9-வது வரிசையில் களமிறங்கியது பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தோனியின் இந்த முடிவு குறித்து இந்தியா மற்றும் சென்னை அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா விமர்சித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், "ஆர்சிபி அணிக்கு இது ஒரு முக்கியமான வெற்றி. சேப்பாக்கத்தில் வெற்றி பெற்றது நடப்பு தொடரில் அவர்களுக்கு ஊக்கமாக அமையும். தோனி 9-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தது அர்த்தமற்ற ஒன்று. அவர் முன்னதாக வந்து சிஎஸ்கேவின் ரன்ரேட்டுக்கு உதவியிருக்கலாம்" என்று கூறினார்.