சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை, மேலக்கரந்தை கிராமம், பொன்வேல் பெட்ரோல்பங்க் எதிரில் இன்று (25.12.2024) அதிகாலை திருப்பூரிலிருந்து திருச்செந்தூருக்கு தநா38 பிஎச். 5794 என்ற பதிவெண் கொண்ட கார் ஒன்றின் ஓட்டுநர் காரை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பின்புறத்திலிருந்து வந்த கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 5 நபர்களில் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம், அலங்கியம் கிராமத்தைச் சேர்ந்த திரு.விஜயகுமார் (வயது 38) த/பெ.பழனிச்சாமி, திரு.செல்வராஜ் (வயது 38) த/பெ.ஆறுமுகம் மற்றும் திரு.விக்னேஷ் (வயது 31) த/பெ.காளிமுத்து ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் ராஜ்குமார் (வயது 35) மற்றும் திரு.மகேஷ் குமார் (வயது 33) ஆகிய இருவருக்கும் தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.