
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
கடலூர் மாவட்டம், செம்மங்குப்பத்தில் இன்று (8-7-2025) காலை நடந்த மோசமான ரெயில் விபத்தில் விலை மதிப்பில்லாத இரண்டு இளம் பிள்ளைகளின் உயிர் பறிபோன செய்தியைக் கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். வாழ வேண்டிய வயதில் உயிரிழந்த அந்தத் துளிர்களின் மரணம் என்னை ஆற்றொன்னாத் துயரில் ஆழ்த்துகிறது.
விபத்தில் உயிரிழந்த செல்வன் நிமிலேஷ் (வயது 12), த/பெ விஜயசந்திரகுமார்) மற்றும் செல்வி சாருமதி (வயது 16), த/பெ .திராவிடமணி) ஆகிய இருவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நான்கு நபர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளித்திடவும் அறிவுறுத்தியுள்ளேன்.
மேலும் இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 5 லட்சம் ரூபாய் வழங்கிட உத்தரவிட்டுள்ளேன். பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்..என தெரிவித்துள்ளார்.