
லண்டன்,
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றுள்ளன. இதன் காரணமாக 2 போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமனில் உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் 3வது போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில், 3வது போட்டியிலாவது இங்கிலாந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் விளையாடுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள ஆர்ச்சர் 42 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். இருப்பினும் காயம் காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து அவர் விலகி இருந்தார்.
அவர் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதால் அவர் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே ஆர்ச்சர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சில காரணங்களால் அவரால் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க முடியவில்லை. இதனால் தான் அவர் மூன்றாவது போட்டியில் விளையாடுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், ஆர்ச்சர் விளையாடுவதற்கு தயாராக உள்ளதாக இங்கிலாந்து பயிற்சியாளர் மெக்கல்லம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, 3வது போட்டியில் நாங்கள் அதிகமான பவுன்ஸ், வேகம், கொஞ்சம் இருபுறமும் பந்து திரும்புவதற்கு தேவையான மூமன்ட் ஆகியவை இருக்கக்கூடிய பிட்ச் அமையும் என்று நம்புகிறோம்.
ஆர்ச்சர் விளையாடுவதற்கு தயாராக இருக்கிறார். அது மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. காயத்தால் டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடாத அவரால் என்ன சாதிக்க முடியும் என்பது நமக்குத் தெரியும். தற்போது வாய்ப்பு அவரை தேடி வந்துள்ளது. இந்த வாய்ப்பை மீண்டும் பிடித்து அவர் தன்னுடைய முன்னேறிய செயல்பாடுகளை வெளிப்படுத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.