துரை வைகோவின் ராஜினாமா கடிதம் குறித்த கேள்வி.. வைகோ சொன்ன பதில்

2 hours ago 1

சென்னை,

ம.தி.மு.க.வின் நிர்வாக குழு நாளை கூடும் நிலையில் அக்கட்சியின் முதன்மைப் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து, பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ ராஜினாமா செய்துள்ளார்

தன்னால் இயக்கத்திற்கோ, இயக்க தந்தைக்கோ எள் முனை அளவு கூட சேதாரம் வந்து விடக்கூடாது என்று தான் இந்த முடிவை எடுத்து இருப்பதாகவும், மறுமலர்ச்சி திமுகவின் முதல் தொண்டனாக இருந்து கட்சிக்காக உழைப்பேன் என்றும் தான் வெளியிட்டுள்ள கடிதத்தில் துரை வைகோ தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் துரை வைகோ ராஜினாமா கடிதம் தொடர்பாக, நாளை நடைபெறும் ம.தி.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் வைகோ முக்கிய முடிவு எடுப்பார் என்று அக்கட்சியின் பொருளாளர் செந்திலதிபன் தெரிவித்திருந்தார். மேலும் நாளை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும் என்றும், ம.தி.மு.க நிர்வாக குழு கூட்டத்தில் துரை வைகோவும் பங்கேற்பார் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே கட்சியில் இருந்து விலகிய துரை வைகோ சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம், கட்சி பதவியில் இருந்து விலகியது குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "என்னால் கட்சிக்கோ, தலைமைக்கோ எந்த களங்கமும் ஏற்படக் கூடாது என நினைக்கிறேன். மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். கட்சியில் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். நிர்பந்தத்தாலேயே அரசியலுக்கு வந்தேன். தொண்டர்கள், நிர்வாகிகள் விருப்பத்தின்பேரிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டேன். பதவியில் இருப்பதால்தான் பிரச்சினை வருகிறது, தொண்டனாக தொடர்வேன். இது உள்கட்சி விவகாரம், வெளியில் விவாதிக்க முடியாது. தேர்தல் அரசியல் எனக்கு வேண்டாம், விருப்பம் இல்லை" என்று கூறினார்.

இந்நிலையில் துரை வைகோ கட்சிப் பொறுப்பிலிருந்து விலகியது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், "நாளை நிர்வாக குழு கூட்டத்தில் எல்லோரும் கலந்துகொள்வார்கள். இந்த பிரச்சினை குறித்து எல்லோரும் சமாதானமாக பேசுவார்கள். நல்ல முடிவுகள் எடுக்கப்படும், அடுத்து நடத்த வேண்டிய போராட்டங்கள், நடத்த வேண்டிய பொதுக்குழு, இதை பற்றி எல்லாம் விவாதிக்கத்தான் நாளை நிர்வாக குழு கூடுகிறது.

ராஜினாமா கடிதம் குறித்து இப்போதைக்கு எந்த கருத்தையும் கூற முடியாது. நாங்கள் கலந்து பேசி முடிவெடுப்போம்" என்று கூறினார்.

Read Entire Article