
புதுடெல்லி,
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து, துபாய் இளவரசர், துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு துறை மந்திரியான ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தவும் இந்தியாவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று காலை டெல்லி வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதன்பின்னர், மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர் உள்ளிட்டோரை சந்தித்து அவர் பேசினார். இந்த சந்திப்பு ஆக்கப்பூர்வ முறையில் இருந்தது என சிங் குறிப்பிட்டார்.
இரு நாடுகளும் அமைதி மற்றும் வளத்திற்கு இணைந்து பணியாற்றும் என ராஜ்நாத் சிங் கூறினார். அவருடைய முதல் இந்திய பயணத்தில் துபாய் இளவரசரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என ஜெய்சங்கர் கூறினார்.
இந்நிலையில், பிரதமர் மோடியை அவர் இன்று நேரில் சந்தித்து பேசினார். இதுபற்றி குறிப்பிட்ட பிரதமர் மோடி, துபாய் இளவரசர் ஷேக் ஹம்தன் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தவுமை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் விரிவான செயல்திட்ட உறவை மேம்படுத்துவதில் துபாய் முக்கிய பங்கு வகிக்கிறது என கூறிப்பிட்டார்.
அவருடைய இந்த சிறப்பான வருகையானது, நம்முடைய ஆழ்ந்த வேரூன்றிய நட்புறவை மீண்டும் உறுதி செய்துள்ளதுடன், வருங்காலத்தில் வலுவான ஒருங்கிணைப்புக்கான வழியேற்படுத்தும் வகையிலும் இருக்கும் என அவர் கூறியுள்ளார்.