வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறி பல கோடி ரூபாய் மோசடி; 12 பேர் கைது

5 hours ago 2

பெங்களூரு,

பெங்களூரு எல்.ஆர்.நகர் பகுதியை சேர்ந்த வாலிபரின் வாட்ஸ்-அப்பிற்கு வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு வழங்குவதாக குறுஞ்செய்தி வந்தது. மேலும் இந்த வேலையை முடித்து கொடுத்தால் உங்கள் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதை நம்பிய வாலிபர் அந்த லிங்க் உள்ளே சென்று அவர்கள் கேட்ட அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து கொடுத்தார். பின்னர் அவருக்கு வீட்டில் இருந்தே வேலை பார்ப்பதற்காக ஆன்லைன் மூலம் வேலை வழங்கப்பட்டது.

பின்னர் அந்த வாலிபரை தொடர்பு கொண்ட மர்மநபர், நீங்கள் வேலை செய்ததற்கான சம்பளம் ரூ.10.80 லட்சம் தங்களிடம் உள்ளதாகவும், அதை பெறுவதற்கு ரூ.5 லட்சம் தங்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு, முழு பணத்தையும் பெற்று கொள்ளுங்கள் என்று கூறினார். அதன்படி வாலிபர் ரூ.5 லட்சம் செலுத்தினார். ஆனால் மர்மநபர்கள் மேலும் ரூ.3 லட்சம் கேட்டனர். இதனால் சந்தேகம் அடைந்த வாலிபர் போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணையில், வீட்டில் இருந்தே வேலை செய்ய வாய்ப்பு தருவதாக கூறி பலரின் வங்கி கணக்குகள், ஏ.டி.எம். கார்டு, வங்கி புத்தகத்தை வாங்கி வைத்து கொண்டு, அதன் மூலம் ஒவ்வொருவரின் வங்கி கணக்கில் உள்ள பண விவரத்தை தெரிந்து கொண்டு, அவர்களிடம் ஆசை வார்த்தைகள் பேசி மோசடி செய்து வந்தது தெரியவந்தது. அந்த கும்பல் பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்டோரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததும் தெரியவந்தது.

இந்த மோசடி தொடர்பாக பெங்களூரு, மும்பையில் ஒருவரையும், உத்தரபிரதேசத்தில் 10 பேரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக கைதான 12 பேர் கொடுத்த தகவலின்பேரில் 400 சிம்கார்டுகள், 140 ஏ.டி.எம். கார்டுகள், 17 காசோலை புத்தகங்கள், 27 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Read Entire Article