
திருப்பரங்குன்றம்,
முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்துவது என அறங்காவலர் குழு தீர்மானித்தது. இந்தநிலையில் ரூ.2.44 கோடியில் 20 திருப்பணிகள் செய்வது என்று அறங்காவலர் குழுவினர் முடிவு செய்தனர்.
இதற்கிடையில் கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி அன்று ராஜகோபுரம் மற்றும் கோவிலுக்குள் வல்லபகணபதி கோவில், பசுபதி ஈஸ்வரர் உள்ளிட்ட உப கோவில்களுக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 24-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதனையடுத்து கோவிலின் 7 நிலை ராஜகோபுரத்தில் பழமை மாறாமல் பஞ்சவர்ணம் பூசும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதே போல கோவிலுக்குள் உள்ள மண்டபங்களில் வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. கோவிலின் பிரதானமான கருவறையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி பாலாலயம் நடத்தப்பட்டு திருப்பணிகள் நடக்கிறது.
இதற்கிடையே தேங்காய் தொடும் முகூர்த்தம் நிகழ்ச்சி நேற்று கோவில் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கோவில் அறங்காவலர் குழு தலைவர் ப.சத்யபிரியா பாலாஜி தலைமை தாங்கினார். கோவில் துணை கமிஷனர் எம்.சூரியநாராயணன் முன்னிலை வகித்தார். அறங்காவலர்கள் நா.மணிச்செல்வன், தி.மு.பொம்மதேவன், தி.ராமையா, துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், உள்துறை சூப்பிரண்டு சத்தியசீலன், பேஷ்கார் புகழேந்தி உள்பட கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக கோவிலில் இருந்து கோவில் அலுவலகம் வரை மேளதாளங்கள் முழங்க தேங்காய் பழங்களுடன் கோவில் சிவாச்சாரியார்கள் ரமேஷ், ஆனந்த், பிச்சைக்கண்ணு, அஜித் ஆகியோர் வந்தனர்.
பின்னர் சிவாச்சாரியார்கள் தயார்படுத்திய கும்பாபிஷேகம் நேரம், யாகசாலை பூஜையின் விவரம் மற்றும் கும்பாபிஷேக அழைப்பிதழ் குறித்து கோவில் உள்துறை பேஷ்கார் நெடுஞ்செழியன் வாசித்தார். அதில் வருகிற 23-ந்தேதி காலை 8 மணி முதல் 9 மணியளவில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் 14-ந்தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் ராஜ கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்காக ஜூலை 10-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்குகிறது. தொடர்ந்து 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் இரு வேளையிலும் யாகசாலை பூஜை நடக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.