
துபாய்,
துபாயில் ஜுமைரா லேக்ஸ் டவர்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் கேதார் சேலகமாசெட்டி (வயது 42). இவர் சமீபத்தில்தான் துபாய்க்கு குடிபெயர்ந்திருக்கிறார். இவர் துபாயில் சில தொழில்களில் முதலீடு செய்திருந்ததாகவும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்கு தெலுங்கு திரைப்பட தயாரிப்பில் பெரிய திட்டங்கள் இருந்தன. குறிப்பாக அல்லு அர்ஜூன், சுகுமார் மற்றும் விஜய் தேவரகொண்டா ஆகிய முன்னணி பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்.
கடந்த 2022-ம் ஆண்டு விஜய் தேவரகொண்டாவை வைத்து ஒரு படத்தை இயக்க கேதார் சேலகமாசெட்டி அறிவித்திருந்தார். ஆனால் இன்னும் அதன் படப்பிடிப்பை தொடங்கவில்லை. இதில் விஜய் தேவரகொண்டா மற்றும் சுகுமாருக்கு தலா ரூ.10 கோடி அட்வான்ஸ் கொடுத்துள்ளார். ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா முக்கிய வேடத்தில் நடித்த 'கம் கம் கணேஷா' என்ற படத்தை தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று மதியம் அவரிடம் இருந்து தகவல்கள் வராததால் அவர் வசித்த இடத்திற்கு நண்பர்கள், சமூக ஆர்வலர்கள் சென்று பார்த்தனர். அப்போது அவரது குடியிருப்பில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். அவரது இறப்புக்கான காரணங்கள் தெரியவில்லை என வெளிநாடுவாழ் தெலுங்கானா மக்களின் வளைகுடா பிரிவின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.வி ரெட்டி தெரிவித்துள்ளார். கேதார் சேலகமாசெட்டி துபாயில் திடீர் மரணம் அடைந்தது தெலுங்கு திரைப்படத்துறையினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.