
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து நடந்து வந்தது. வானிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 18-ந் தேதி கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மீண்டும் கப்பல் போக்குவரத்து கடந்த மாதம் (ஜனவரி) முதல் வாரத்தில் தொடங்கப்படும் என கப்பல் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தொழில்நுட்ப சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகள் நீடித்து வந்ததால் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனையடுத்து, நாகை துறைமுகத்தில் இருந்து இரண்டரை மாதங்களுக்கு பிறகு இலங்கைக்கு மீண்டும் கப்பல் சேவை இம்மாதம் 22-ந்தேதி தொடங்கியது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் 28-ந்தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படியே நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வங்கக்கடலில் பலத்த காற்று வீசி வருகிறது.
மோசனமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இன்று 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், மார்ச் 1-ந் தேதி முதல் கப்பல் போக்குவரத்து வழக்கம்போல் நடைபெறும் என்றும் கப்பலை இயக்கும் சுபம் நிறுவனம் அறிவித்துள்ளது.
நாகை-இலங்கை இடையே நீண்ட நாள் இடைவெளிக்குப் பிறகு கப்பல் போக்குவரத்து தொடங்கி 4 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீண்டும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது சுற்றுலாப் பயணிகளிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.