
சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் நடைபெற்று வருகிறது. முதலில் விழா மேடைக்கு வந்த விஜய்க்கு கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனையடுத்து, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக 'கெட்அவுட்' கையெழுத்து இயக்கம் என்று வைக்கப்பட்டுள்ள பேனரில் த.வெ.க. தலைவர் விஜய் முதலில் கையெழுத்திட்டார். அவரைத் தொடர்ந்து பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பேனரில் கையெழுத்திட்டனர். அதனை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் கையெழுத்திட்டனர்.
அதன்பின் பிரசாந்த் கிஷோரிடம் கையெழுத்திட கேட்கப்பட்டது. ஆனால், பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுத்துவிட்டார். முன்னதாக, அந்தக் கையெழுத்து இயக்கம் குறித்து பிரசாந்த் கிஷோருக்கு ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்தார். அதன்பின்னும் ஆனந்த் கையெழுத்திட கேட்டும் பிரசாந்த் கிஷோர் மறுப்பு தெரிவித்தார்.
அந்த பேனரில் பெண்கள் பாதுகாப்புக்கும் நலனுக்கும் எதிராக நடந்து வரும் பெரும் துயரை கண்டும், காணாத பொறுப்பற்ற தன்மை, விமர்சனத்துக்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரலை ஒடுக்கும் கோழைத்தனம், வாக்கு வங்கிகளுக்காக சாதி மற்றும் மற்ற சீர்கேடுகளை எதிர்க்க அஞ்சும் நயவஞ்சகம், ஆடம்பரம் மற்றும் ஆட்சியின் அவலத்தை மடைமாற்றம் செய்வதையே நம்பி வாழும் திறனற்ற நிர்வாகம், சாமானியர்களுக்கு எதிராக வன்முறைகளை அரசியல் நோக்கோடு ஊக்குவிக்கும் வகையில் செயலற்று இருப்பது, ஒரு சிலரின் பேராசை பசிக்காக நடக்கும் திட்டமிடப்பட்ட உழைப்பு சுரண்டலும், இயற்க்கை வளச் சுரண்டபடுகின்றன என்று விமர்சிக்கப்பட்டு இருந்தது.