சென்னை: துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட கவர்னரே நியமிக்கலாம் என்று யுஜிசி தன் விதிகளை திருத்துமானால் என்னவாகும் உயர் கல்வியின் நிலை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கவலை தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது: கல்லூரிகள் இயங்குவது மாநில அரசின் இடத்தில்; பேராசிரியர்களுக்கு ஊதியம் தருவது மாநில அரசு; உதவித்தொகை-ஊக்கத்தொகை – கல்வி கட்டண சலுகை என மாணவர்களுக்கு அனைத்துச் செலவுகளையும் செய்வது நாங்கள். இவ்வளவையும் நாங்கள் செய்ய, எம் பல்கலைக்கழங்களுக்கு வேந்தராக இருந்து நிர்வகிப்பதோ எங்கிருந்தோ வந்த கவர்னர்.
இதையெல்லாம் மிஞ்சும் கொடுமையாக, துணைவேந்தரையும் ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட கவர்னரே நியமிக்கலாம் என்று யுஜிசி தன் விதிகளை திருத்துமானால் என்னவாகும் உயர்கல்வியின் நிலை? தமிழ்நாடு உயர்கல்வியில் முதலிடத்தில் இருப்பதை காணப் பொறுக்காத வயிற்றெரிச்சலில் நம்மை கீழே தள்ளும் அப்பட்டமான முயற்சிதான் யுஜிசி வரைவு நெறிமுறைகள். இதனை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். தமிழர்களின் ஒன்றுபட்ட குரலுக்கு ஒன்றிய அரசு செவிசாய்க்காவிட்டால், மக்கள் மன்றத்தையும் நீதிமன்றத்தையும் நாடுவோம்! வெல்வோம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post துணைவேந்தரையும் கவர்னரே நியமிக்கலாம் என்றால் உயர்கல்வியின் நிலை என்னவாகும்? முதல்வர் மு.க.ஸ்டாலின் டுவிட் appeared first on Dinakaran.