சென்னை: “தமிழகத்தில் டீன்கள், துணை வேந்தர்கள் நியமனத்தில் தாமதம் காட்டுகிறார்கள். ஆனால், துணை முதல்வரை நியமிப்பதில் அவசரம் காட்டியிருக்கிறார்கள்.” என தமிழிசை சவுந்தரராஜன் சாடியுள்ளார்.
முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை கிண்டியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும், காமராஜர் நினைவிடத்திலும் இன்று (அக்.2) மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜகவை பொறுத்தவரை தலைவர்களில் வேறுபாடு கிடையாது. மது ஒழிப்பு மாநாட்டை விசிக நடத்துகிறது. சிறுத்தையாக ஆரம்பித்து விசிக சிறுத்துப் போய் கொண்டிருக்கிறது. தற்போது, மது ஒழிப்பு மாநாடு மகளிர் மாநாடாக மாறியிருக்கிறது. மது ஒழிப்பு மாநாட்டுக்கு விசிக கட்சியிலேயே ஆதரவு இல்லை. இதுதான் விசிகவின் கொள்கை. மது ஒழிப்பு மாநாடு நடத்துபவர், காந்தியை தவிர்த்துவிட்டு, காமராஜர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியிருக்கிறார். ஒருவேளை அவருக்கு குற்ற உணர்வு குறுகுறுக்கிறதா என்பது தெரியவில்லை.