
சென்னை,
தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து கவர்னரை நீக்கும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத வழக்கில், ஏப்ரல் 8-ம் தேதி சுப்ரீம்கோர்ட்டு ஒரு அதிரடி தீர்ப்பை அளித்தது.
அந்தத் தீர்ப்பில், கவர்னரின் செயல்பாடுகளைக் கண்டித்து, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கக் கால வரம்பு நிர்ணயித்த சுப்ரீம்கோர்ட்டு, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 142 தனக்கு அளித்திருக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாடு அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதலும் அளித்தது.
இந்நிலையில் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைகழகத்திற்கு துணை வேந்தரை நியமிக்க, தமிழ்நாடு அரசு தேடுதல் குழுவை அறிவித்துள்ளது. இதன்படி சென்னை ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன், முன்னாள் துணைவேந்தர்கள் பேராசிரியர் சச்சிதானந்தம், பேராசிரியர் விஜயகுமார் ஆகியோரைக் கொண்ட தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது
துணை வேந்தர்களை நியமிக்கும், நீக்கும் மசோதா, சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து சட்டமானது குறிப்பிடத்தக்கது.
