
நாகர்கோவில்,
சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரத்திற்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு வந்தது. இன்று காலை 7 மணி அளவில் தோவாளை அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் இருந்து ஒருவர் தவறி கீழே விழுந்தார்.
இதை பார்த்த சக பயணிகள் நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சத்தியதாஸ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் ரெயில் பெட்டியில் இருந்து தவறி விழுந்து பலியானவர் நெல்லையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்வதற்காக டிக்கெட் எடுத்திருந்தது தெரியவந்தது.
திருவனந்தபுரத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் தவறி விழுந்து பலியாகி இருக்கலாம் என்று தெரிகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.