கிண்டி கவர்னர் மாளிகைக்கு மனு கொடுக்க வந்த அரக்கோணம் கல்லூரி மாணவி

4 hours ago 4

கிண்டி,

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், அரக்கோணம் காவனூரைச் சேர்ந்த தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த தெய்வச்செயல் ஏற்கனவே திருமணமானதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், அரசியல் கட்சி முக்கிய பிரமுகரின் பாலியல் இச்சைக்கு தன்னை இணங்க வற்புறுத்தி கொடுமைப்படுத்தியதாகவும் கூறி தற்கொலைக்கு முயன்றார்.

இதுபற்றி மாணவியின் பெற்றோர், ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் அரக்கோணம் மகளிர் போலீசார் தெய்வச்செயல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில் தெய்வச்செயல் ஐகோர்ட்டில் முன்ஜாமீனும் பெற்றுள்ளார்.

மேலும் தி.மு.க. இளைஞரணி பொறுப்பில் இருந்து தெய்வச்செயல் நீக்கப்பட்டார். இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவி, தனது வழக்கில் முறையான விசாரணை நடைபெறவில்லை. தனக்கு நீதி வேண்டும். எனவே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கவர்னர் ஆர்.என்.ரவியிடம் கோரிக்கை மனு கொடுப்பதற்காக நேற்று கிண்டி கவர்னர் மாளிகைக்கு தனது தாயாருடன் வந்தார்.

ஆனால் கவர்னர் சென்னையில் இல்லை. ஆன்லைன் மூலம் புகார் கொடுங்கள் என கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் தெரிவித்தனர். மேலும் கிண்டியில் உள்ள ஆர்.டி.ஓ.விடம் புகார் கொடுக்கும்படி கூறி மாணவி மற்றும் அவரது தாயாரை பெண் போலீசாருடன் ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

அதன்படி கிண்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு சென்ற பெண் போலீசார், அங்கு ஆர்.டி.ஓ.வை சந்திக்காமல் அங்கிருந்து கோயம்பேடு நோக்கி மாணவியை அழைத்து சென்றனர். ஈக்காட்டுத்தாங்கல் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, தன்னை வேறு எங்கேயோ அழைத்துச் செல்வதாக கூறி பெண் போலீசாருடன் வாக்குவாதம் செய்த மாணவி, தனது தாயாருடன் ஆட்டோவில் இருந்து கீழே இறங்கினார்.

Read Entire Article