
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதியன்று. காஷ்மீர் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற மக்களை மதத்தின் பெயரால் பயங்கரவாதிகள் படுகொலை செய்த கொடூரம் உலக நாடுகளையே உலுக்கியுள்ளது. சமாதானத்தையும், அமைதியையும் நாடும் நமது பாரத நாட்டைக் கொலைக்களமாக மாற்றும் நோக்கத்தோடு தீவிரவாத செயல்களில் ஈடுபடும் பாகிஸ்தானோடு அரசாங்க ரீதியான உறவுகளை நாம் முற்று முழுதாக முறித்துக் கொண்டு வருகிறோம்.
மேலும், காஷ்மீர் பகுதியின் அமைதியைக் கெடுக்க சதி திட்டங்கள் தீட்டும் குழுக்களை உள்நாட்டிலேயும். எல்லை தாண்டியும் கண்டறிந்து அவர்கள் மீது சமரசமில்லாத முறையில் நடவடிக்கைகள் எடுக்க நமது மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருகிறது.
நாடு முழுக்க சட்டவிரோதமாக குடியேறியுள்ள பாகிஸ்தானியர்களை வெளியேற்றும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்து சட்டவிரோத குடியேறிகளே இந்தியாவிற்குள் நடக்கும் பல அசம்பாவிதங்களுக்குக் காரணம் எனவும். ஒரு அசாதாரண சூழ்நிலையில் நம் நாட்டை சேதப்படுத்தும் நோக்கத்துடன் தான் அவர்கள் இங்கு குடியேறியுள்ளார்கள் எனவும் வலுவாக சந்தேகிக்கும் சூழ்நிலையும் தற்போது தலை தூக்கியுள்ளது.
"பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால், வடகிழக்கு மாநிலங்களை வங்கதேசம் கைப்பற்ற வேண்டும் என வங்கதேச ராணுவ ரைபிள்ஸ் படையின் முன்னாள் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.எல்.எம். பஸ்லுர் ரஹ்மான் இந்தியாவிற்கு எதிராகக் கூறியுள்ள கருத்து நமது சந்தேகத்தை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த நேரத்தில் 24 ஆண்டுகளாக திருப்பூரில் வாழ்ந்து வந்து, ஒரு தமிழகப் பெண்ணையும் திருமணம் செய்து கொண்ட சயான் என்ற வங்கதேசத்துக் குடியேறியை இரண்டு நாட்களுக்கு முன்பு நமது காவல்துறை கைது செய்த போதும், ஏப்ரல் 29-ஆம் தேதியன்று டெல்லி காவல்துறை சென்னையில் சட்டவிரோதமாக வாழும் 33 வங்கதேசத்து குடியேறிகளை கைது செய்த போதும் தமிழகமே பேரதிர்ச்சியடைந்தது.
ஆனால், தமிழகத்தில் நமது ராணுவத்தை சந்தேகித்தும், நாட்டின் பாதுகாப்பு விஷயங்களில் சர்ச்சைகள் எழுப்பும் விதமாகவும் சிலர் அவதூறுகளைப் பரப்ப முயல்வதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். திமுக அரசை விமர்சனம் செய்தால் உடனே கைது, தங்கள் உரிமைகளுக்காக போராடுபவர்கள் மீது பொய் வழக்கு. பாஜக-வினர் உட்பட எதிர்க்கட்சிகள் மீது காவல்துறையை ஏவி அச்சுறுத்தல் என சர்வாதிகார போக்கைக் கையாளும் திமுக ஆட்சியில்தான் தேச இறையாண்மைக்கு விரோதமாகவும், நமது இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாகவும் பதிவிடுபவர்கள் சுதந்திரமாக உலவுகிறார்கள். சற்று சிந்தித்துப் பார்த்தால் திமுக அரசே அவர்களை சீராட்டி வளர்ப்பது போல் உள்ளது.
ஆகவே, பஹல்காம் தீவிரவாத தாக்குதலைக் கண்டித்தும், பாகிஸ்தான். வங்கதேசத்தைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிகளை தொடர்ந்து அடையாளம் கண்டு வெளியேற்றுவதிலும் தமிழக அரசு மும்முரமாக செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவும், ராணுவத்தின் மீதும் தேச பாதுகாப்பின் மீதும் ஆதாரமற்ற விஷ வதந்திகளைக் கிளப்பும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மே 5-ஆம் தேதியன்று ஒரு கவன ஈர்ப்பு போராட்டத்தை அறிவித்துள்ளோம்.
தேசத்தைக் காப்பதில் நாம் ஒவ்வொருவருக்கும் கடமையுள்ளது என்பதை உணர்ந்து இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தருமாறு தேச பக்தர்கள் அனைவரையும் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.