
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை நகர தி.மு.க. சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் சின்ன கடை வீதியில் நேற்று இரவு நடந்தது. இதில் முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்தார். அப்போது பலத்த காற்று வீசியதால் மேடையின் அருகே பொருத்தப்பட்டிருந்த அதிக வெளிச்சம் தருவதற்காக அமைக்கப்பட்டு இருந்த மின்விளக்கு கம்பம் திடீரென்று சாய்ந்து ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்த மைக் வைக்கப்பட்டு இருந்த 'போடியம்' மீது விழுந்தது.
உடனே சுதாரித்துக்கொண்ட ஆ.ராசா எம்.பி. தான் பேசிக்கொண்டு இருந்த மேடை முன்பு இருந்து சற்று தள்ளி நகர்ந்து சென்று விட்டார். இதனால் அவர் எந்தவித காயமும் இன்றி நூலிழையில் உயிர் தப்பினார். இதனையடுத்து உடனடியாக பேச்சை நிறுத்திய ஆ.ராசா எம்.பி. அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். தொடர்ந்து மழை பெய்ததால் கூட்டம் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் கூட்டம் நடந்த இடத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
ஆ.ராசா எம்.பி. பேசிக்கொண்டு இருந்த மைக் மீது மின்கம்பம் விழுந்தது இதில் அவர் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவத்தால் மயிலாடுதுறையில் நேற்று பெரும் பரபரப்பு நிலவியது.