தீபாவளி பண்டு சீட்டு நடத்தி 400 பெண்களிடம் ₹40 லட்சம் மோசடி

1 month ago 5

பண்ருட்டி, நவ. 21: தீபாவளி பண்டு சீட்டு நடத்தி 400 பெண்களிடம் ₹40 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது எஸ்பி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி லட்சுமிபதி நகர் எல்லை மாரியம்மன் கோயில் தெரு மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பெண்கள் கடலூர் எஸ்பி ராஜாராமிடம் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி லட்சுமிபதி நகரை சேர்ந்த அர்ஜூனன்(30) என்பவரும், பண்ருட்டி அடுத்த விசூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் ஆகிய 2 பேரும் சேர்ந்து பண்ருட்டி பகுதியை சேர்ந்த பெண்களிடம் சிறு சேமிப்பு திட்டம் பெயரில் நகை சீட்டு, தீபாவளி பலகார சீட்டு நடத்தி வந்துள்ளனர். இதற்கு முன் 2 தீபாவளி சீட்டுகளில் முறையாக அனைவருக்கும் வழங்கியதால், நடப்பாண்டு தீபாவளி நகை சீட்டில் சேர்ந்தோம். வாரந்தோறும் ₹300, ₹500, ₹1,000 எனவும், சிலர் மாத சீட்டிலும் குறிப்பிட்ட தொகை செலுத்தினர்.

வாரச்சீட்டு, மாத சீட்டு முடிந்த நிலையில், நகை, பலகாரம் வரும் என எதிர்பார்த்தபோது, எதுவும் வரவில்லை. இதனால் அர்ஜூனன் வீட்டுக்கும், அவர்கள் நடத்தும் செல்போன் கடைக்கும் சென்று பார்த்தபோது இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. எங்கள், 400 பேரிடம் இருந்தும் ₹40 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இதற்கிடையில் பண்ருட்டி பஸ் நிலையத்தில் செல்போன் கடை நடத்தி வந்த கண்ணன் திடீரென விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். லட்சுமிபதி நகரில் வசித்து வரும் அர்ஜூனன் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட எஸ்பி ராஜாராம், இதுகுறித்து உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் வேலுமணி ஆகியோருக்கு உத்தரவிட்டார். இதைதொடர்ந்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் சீட்டு பணம் கட்டி பெண்கள் ஏமாந்தது தெரிந்தது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அர்ஜூனை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post தீபாவளி பண்டு சீட்டு நடத்தி 400 பெண்களிடம் ₹40 லட்சம் மோசடி appeared first on Dinakaran.

Read Entire Article