சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை உரிய நேரத்தில் வழங்கப்படவில்லை. திமுக அரசின் திறமையின்மை காரணமாக, நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கும், அங்குள்ள பணியாளர்களுக்கும் தகராறு ஏற்பட்டு வருகின்றன. அரசின் தவறுக்கு, நியாய விலைக் கடைப் பணியாளர்கள் பலியாக்கப்படுகின்றனர், என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பொங்கல் திருநாளை முன்னிட்டு, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் இலவச வேட்டி, சேலை வழங்குவது வாடிக்கை. இதன் முக்கிய நோக்கம், பொங்கல் பண்டிகையை, தமிழக மக்கள், குறிப்பாக ஏழையெளிய மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதுதான். இந்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால், அனைத்தையும் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வழங்க வேண்டும். ஆனால், இந்த அடிப்படை நோக்கத்தையே சீர்குலைக்கும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.