கோடியக்கரை சரணாலயத்தில் 1.50 லட்சம் வெளிநாட்டு பறவைகளுக்கு வளையம்

3 hours ago 3

வேதாரண்யம்: கோடியக்கரை சரணாலயத்தில் இதுவரை 1.50 லட்சம் பறவைகளுக்கு வளையம் பொருத்தப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்துக்கு ஆண்டு தோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை, சைபீரியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து 294 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம். வடகிழக்கு பருவமழையால் நீர்நிலைகள் நிரம்பி பறவைகள் வருவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவியதால் கோடியக்கரை சரணாலயத்திற்கு பறவைகள் சீசன் துவக்க காலத்தில் வந்து குவிந்தது.

ரஷ்யா, ஈராக்கில் இருந்து கடல் ஆலா பறவைகள், இலங்கையில் இருந்து பூநாரை மற்றும் கரண்டி மூக்குநாரை, சைபீரியாவில் இருந்து உள்ளான் வகையை சேர்ந்த பட்டாணி உள்ளான், கொசு உள்ளான், கடல்காகம் உள்ளிட்ட லட்சக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்தன. இதை நாள்தோறும் சுற்றுலா பயணிகள் ரசித்து பார்த்து சென்றனர். இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்ததால் சரணாலயத்தில் 3 அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால் தங்குவதற்கு இடம் இல்லாததால் சீசன் காலம் முடிவதற்குள் பல வெளிநாட்டு பறவைகள் வேறு இடம் தேடி சென்று விட்டன. ஒருசில வகை பறவைகள் மட்டுமே இங்கு தங்கியுள்ளன. சரணாலயத்தில் தேங்கியுள்ள தண்ணீர் வற்றினால் மீண்டும் பறவைகள் வர வாய்ப்புள்ளது. இதற்கிடையில் கோடியக்கரைக்கு வலசை வரும் பறவைகளுக்கு காலில் வளையமிடும் பணி நடந்து வருகிறது.

இதுகுறித்து மும்பையை சேர்ந்த பறவை ஆராய்ச்சியாளர் சிவக்குமார் கூறியதாவது: இந்தியாவில் இதுவரை 7 லட்சம் பறவைகளுக்கு வளையம் இடும் பணி நடந்துள்ளது. 1927ம் ஆண்டு முதல் இந்தியாவில் பறவைகளுக்கு வளையமிடும் பணி நடந்து வருகிறது. கோடியக்கரையில் 1962ம் ஆண்டு பறவைகளுக்கு வளையமிடும் பணி துவங்கியது. இங்கு இதுவரை 1.50 லட்சம் பறவைகளுக்கு காலில் வளையமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு 30 நாடுகளில் இருந்து வரும் பறவை இனங்களில் 15 பறவை இனங்கள் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்துக்கு வந்து செல்கிறது. பறவைகளுக்கு காலில் வளையமிடும் பணியில் ஒரு பறவை எந்த நாட்டில் இருந்து எந்த நாட்டுக்கு எந்த காலகட்டத்தில் செல்கிறது, எவ்வளவு நேரத்தில் செல்கிறது, எந்த வழியாக செல்கிறது போன்ற பல்வேறு விவரங்களை துல்லியமாக அறிய முடியும் என்றார்.

The post கோடியக்கரை சரணாலயத்தில் 1.50 லட்சம் வெளிநாட்டு பறவைகளுக்கு வளையம் appeared first on Dinakaran.

Read Entire Article