அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் அமைச்சர் மூர்த்தி

3 hours ago 3

மதுரை: விறுவிறுப்பாக நடைபெற்று வந்த உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. சிறந்த மாடுபிடி வீரர் அபி சித்தருக்கு துணை முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த மாடுபிடி வீரர் ஸ்ரீதருக்கு ஆட்டோ பரிசாக வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டில் 10 காளைகளை அடக்கிய 3ம் இடத்தை பிடித்த விக்னேஷ்க்கு பைக் பரிசாக வழங்கப்பட்டது. 4 வது பரிசாக ஏனாதி அஜய் 9 காளைகள் அடக்கி மொபட் (TVS XL ) பரிசாக வென்றார்.

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சேலம் பாகுபலி காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. வக்கீல் பார்த்தசாரதியின் காளைக்கு சிறந்த காளைக்கான 2ம் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. தாய்பட்டி கண்ணனின் காளைக்கு சிறந்த காளைக்கான 3ம் பரிசாக எலக்ட்ரிக் பைக் வழங்கப்பட்டது. 4வது பரிசாக இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு எலக்ட்ரிக் லோடு பைக் வழங்கப்பட்டது.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அவர்கள் பரிசுகளை வழங்கினார்கள். மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 72 பேர் காயமடைந்துள்ளனர். மாடுபிடி வீரர்கள் 22 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 19 பேர், பார்வையாளர்கள் 31 பேர் உள்பட 72 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்த 67 பேரில் 17 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று தகுதி சான்றிதழ் வழங்கப்பட்ட்டது. 7 கவுண்டர்கள் மூலம் கால் நடை மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடையும் காளைகளுக்கு, மாடு பிடி வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்க 200 மருத்துவர்கள், 60 கால்நடை மருத்துவர்கள், செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் மதுரை காவல் ஆணையர் தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

The post அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் அமைச்சர் மூர்த்தி appeared first on Dinakaran.

Read Entire Article