குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் செர்ரி பிளாசம் மலர்கள்

3 hours ago 3

குன்னூர்: குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பூத்துக் குலுங்கும் செர்ரி பிளாசம் மலர்கள் ரம்மியமாக காட்சியளிக்கிறது . அதை சுற்றுலா பயணிகள் செல்பி எடுத்து மகிழ்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் செர்ரி பிளாசம் மலர்கள் தற்போது குன்னூர் சிம்ஸ்பூங்காவில் பூக்க தொடங்கி உள்ளது. இது வசந்த காலத்தில் மலரும் ஒரு வகை பூ ஆகும். பனி காலம் துவங்கும் போது, அனைத்து இலைகளும் உதிர்ந்து, மரம் முற்றிலும் மலர்களாக காட்சி அளிக்கும். வெள்ளை மற்றும் பிங்க் நிறத்தில் இருக்கும் மலர்களை சக்குரா பூக்கள் என்று தமிழகத்தில் அழைக்கின்றனர். இது ஜப்பான் நாட்டின் தேசிய மலர் ஆகும். இமயமலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் குளிர்காலத்தில் அதிகமாக பூத்து வருகிறது.

இந்த பூக்கள் மருத்துவ குணம் உடையது. சுமார் 30 அடி உயரம் வரை மரங்களில் பூத்துக் குலுங்கும் செர்ரி மலர்களை தேடி தேனீக்கள், சிட்டுக்குருவிகள், அணில்கள் வரும். அங்கு மலர்ந்து உள்ள பூக்களை உட்கொண்டு பசியாற்றும். செர்ரி பூக்களில் இருந்து ஷாம்பு, சென்ட் போன்ற வாசனை திரவியங்கள் தயாரிக்கப்படுகின்றன. அட்லாண்டாவில் ஆண்டு தோறும் செர்ரி மலருக்காக விழா நடத்தப்படுகிறது. நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக வனத்துறை ஊழியர்கள் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி ஆகிய பகுதிகளில் சாலையோரம் செர்ரி மரக்கன்றுகளை நடவுசெய்து பராமரித்து வருகின்றனர். தற்போது சிம்ஸ்பூங்காவில் பூத்து குலுங்கும் செர்ரி மலர்களை கண்டு சுற்றுலா பயணிகள் ரசிப்பது மட்டுமின்றி, அதன் முன்பாக நின்று செல்பி எடுத்து மகிழ்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

The post குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பூத்து குலுங்கும் செர்ரி பிளாசம் மலர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article