திரைப்பிரபலங்களும் எல்லோரையும் போல சாதாரண மனிதர்கள்தான் - அல்லு அர்ஜுனை சாடும் தயாரிப்பாளர்

3 weeks ago 2

ஐதராபாத்,

அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் கடந்த 4-ம் தேதி இரவு ஐதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் இரவு 10.30 மணிக்கு திரையிடப்பட்டது. நடிகர் அல்லு அர்ஜுன் படத்தை பார்க்க சென்றார். அவருடன் நடிகை ராஷ்மிகா மந்தனா உள்பட பலரும் சந்தியா தியேட்டருக்கு வந்தனர். இதனால், தியேட்டரில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, குடும்பத்துடன் புஷ்பா 2 படம் பார்க்க வந்த ரேவதி (வயது 35) என்ற பெண், அவரது மகன் ஸ்ரீதேஜ் (வயது 9) ஆகிய இருவரும் கூட்ட நெரிசலில் சிக்கினர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறுவன் ஸ்ரீதேஜுவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது தாயாரான ரேவதி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தால் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் கடந்த 13ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு ஐதராபாத் கோர்ட்டு ஜாமீன் வழங்கியதையடுத்து அவர் மறுநாள் (14ம் தேதி) விடுதலையானார். அதேவேளை, கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த சிறுவன் ஸ்ரீதேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சிறுவனின் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த ரேவதியின் குடும்பத்திற்கு ரூ. 2 கோடி நிதியுதவி அளிப்பதாக புஷ்பா 2 படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, புஷ்பா 2 பட நடிகர் 1 கோடி ரூபாயும், இப்படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் 50 லட்ச ரூபாயும், படத்தின் டைரக்டர் 50 லட்ச ரூபாயும் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.

சமீபத்தில் தெலுங்கு பட தயாரிப்பாளர் தில்ராஜ் தலைமையில் 36 பேர் கொண்ட குழுவினர் பஞ்சாரா ஹில்ஸ் காமண்ட் கண்ட்ரோல் மையத்தில் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை சந்தித்தனர். இதில் நடிகர் அல்லுஅர்ஜூன் கைது விவகாரம் குறித்து விவாதித்தாக கூறப்படுகிறது. தெலுங்கு திரைத்துறையினரிடம் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. எந்தப் படத்திற்கும் சிறப்புக் காட்சி அனுமதி இல்லை. சட்டம் ஒழுங்கில் எந்த சமரசமும் செய்துகொள்ள முடியாது. ரசிகர்களை கட்டுப்படுத்துவது பிரபலங்களின் பொறுப்பு. தெலுங்கு சினிமாவின் வளர்ச்சிக்கு அரசு துணை நிற்கும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் தம்மரெட்டி பரத்வாஜ், ``தெலுங்கு திரையுலகில் நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் துரதிஷ்டமானது. தெரியாமல் தவறுகள் நடந்தாலும், அதை மறைக்க, தெரிந்தே பொய் சொல்வதை ஏற்க முடியாது... ஒவ்வொரு முறையும், தொழில் துறையினர், முதல்வரை அணுகி, கையை கட்டி நிற்க வேண்டுமா... இந்த சூழல் ஏன் தொடர்ந்து நடக்கிறது என்பதை சமீபத்திய சம்பவங்களை அவதானித்தால் புரியும். தொழில்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமல்ல, வெளியாள்களுக்கும் இது தெளிவளிக்கும்.

திரைப்பட நட்சத்திரங்களை ரசிகர்கள் கடவுளாகக் கருதுகிறார்கள். ஹீரோக்கள் தாங்கள் செல்லும் இடமெல்லாம் கான்வாய்களில் பயணிக்க வேண்டும், ரோட்ஷோ நடத்த வேண்டும் என்பது போல் நடந்து கொள்கிறார்கள். சமீப காலமாக இது ஒரு ட்ரெண்டாகி வருகிறது. திரை நட்சத்திரங்கள் அமைதியாக படம் பார்த்துவிட்டு அதிக சலசலப்பு இல்லாமல் திரும்பினால், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற மூத்த நடிகர்கள் ஒருபோதும் பொறுப்பற்ற முறையில் செயல்படவில்லை. அவர்கள் ரசிகர்களிடம் புத்திசாலித்தனமாக நடந்துகொண்டார்கள்.

அவர்கள் ஒரு மல்டிப்ளெக்ஸ் திரையரங்குக்குச் சென்று, திரைப்படத்தைப் பார்த்துவிட்டு, அந்த இடத்தில் இருக்கும் ரசிகர்களுடன் சிறிது நேரம் உரையாடிய பிறகு திரும்புவார்கள். ஒற்றைத் திரையரங்குக்குச் செல்ல நேர்ந்தால், அதை அறிவிக்காமல் அமைதியாகச் சென்றுவருவார்கள். ஆனால் இப்போது, ஒரு ஹீரோ எப்போது, எங்கே இருப்பார் என்பதை, அவர் புறப்படுவதற்கு முன்பே சமூக ஊடகங்களில் வெளியிடுகிறார்கள். இது பெரும் மக்கள் கூடுவதற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படுகின்றன. திரைப்பிரபலங்களும் எல்லோரையும் போல சாதாரண மனிதர்கள்தான் என்பதை நினைவில் வைத்துக் கொண்டால், அவர்களின் செயல்பாடுகள் இவ்வளவு குழப்பங்களை ஏற்படுத்தாது." என்றார்.

Read Entire Article