
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். சட்டசபை தொகுதி வாரியாக ''மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
கோவையில் கடந்த 7ம் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கிய எடப்பாடி பழனிசாமி பல்வேறு பகுதிகளுக்கு சென்று மக்களிடம் ஆதரவை திரட்டி வருகிறார். இந்த சுற்றுப்பயணத்தின்போது ஆயிரக்கணக்கான மக்கள், அதிமுக தொண்டர்கள் திரண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அப்போது ஏற்படும் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பிக்பாக்கெட் அடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், கோவை மணிக்கூண்டு பகுதியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க காத்திருந்த அதிமுக அம்மா பேரவை நிர்வாகி சம்பத் உள்பட 3 பேரிடம் பிக்பாக்கெட் அடிக்கப்பட்டுள்ளது. பிக்பாக்கெட் அடித்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் உள்ளிட்ட விவரம் இதுவரை வெளியாகவில்லை.