கடந்த 4 மாதத்தில் சென்னையில் சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக 12 பெற்றோர்கள் கைது

4 hours ago 2

சென்னை: சென்னை பெருநகரில் கடந்த 4 மாதங்களில் சிறார்கள் கார் மற்றும் இருசக்கரம் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வழக்குகளில் 12 பெற்றோர்களை கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். 18 வயதுக்கு குறைவான பிள்ளைகள் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்தினால் பெற்றோர்களே பொறுப்பு என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவுப்படி போக்குவரத்து போலீசார் பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். சென்னையில் வாகன ஓட்டிகளிடம் பாதுகாப்பான சாலை போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் சமூக கட்டமைப்பை வலியுறுத்தும் வகையில் ‘விபத்துக்ளே இல்லாத நாள்’ என்ற திட்டத்தின் கீழ் கடந்த 5.8.2024 முதல் 25.8.2024 வரை சாலை சந்திப்புகள், பொதுமக்கள் அதிக கூடும் இடங்கள், பேருந்து நிலையம், ரயில் நிலையம், பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் போக்குவரத்து போலீசார் பிரசாரம் மேற்ெகாண்டனர்.

அதன் பயனாக பெருநகர காவல் எல்லையில் போக்குவரத்து விதிகளை தற்போது 80 சதவீதம் பேர் கடைப்பிடித்து வருகின்றனர். 20 சதவீத வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக பள்ளிகளுக்கு தங்களது குழந்தைகளை இரு சக்கர வாகனங்களில் அழைத்து செல்லும் பெற்றோர், ஹெல்மெட் அணிவதில்லை, ஒருவழி பாதையில் வாகனம் ஓட்டுகின்றனர். பைக்கில் 2க்கும் மேற்பட்ட குழந்தைகளை பாதுகாப்பற்ற முறையில் அழைத்துச் செல்கின்றனர். மேலும், கல்லூரி செல்லும் மாணவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை, சாலை விதிகளை கடைப்பிடிப்பதில்லை என்று தெரியவந்துள்ளது.

பல இடங்களில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஸ்கூட்டர் மற்றும் பைக்கில் செல்லும் காட்சிகள் தற்போது அதிகரித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்கள் மூலம் விழிப்புணர்வு செய்து வருகின்றனர். அப்படி விழிப்புணர்வு செய்து இருந்தாலும் 2024ம் ஆண்டு சென்னையில் மொத்தம் 1,575 கொடுங்காய விபத்துக்கள் நடந்துள்ளன. 2023ம் ஆண்டை காட்டிலும் 378 விபத்துக்கள் குறைவு.

அந்த வகையில் சென்னை பெருநகரில் வடபழனி குமரன் காலனி பகுதியில் பள்ளி மாணவன் ஓட்டிய கார் மோதி முதியவர் மகாலிங்கம் என்பவர் உயிரிழந்தார். கெங்காதரன் என்பவர் படுகாயமடைந்தார். அதேபோல் சாலிகிராமத்தில் பெண் பொறியாளர் தனது மகன் டியூஷன் செல்ல தனது ஸ்கூட்டரை கொடுத்துள்ளார். இதனால் பள்ளி மாணவன் ஓட்டிய ஸ்கூட்டர் மோதிய விபத்தில் முதியவர் சம்பத் என்பவர் கை எலும்பு முறிவு ஏற்பட்டு காயமடைந்தார். இதுபோல் கடந்த 4 மாதத்தில் சென்னை பெருநகர காவல் எல்லையில் பெற்றோர் அனுமதியுடன் சிறுவர்கள் கார் மற்றும் இரு சக்கர வாகனம் ஓட்டியதால் 5 பேர் இறந்துள்ளனர். 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். சிறுவர்கள் கார் மற்றும் இருசக்கர வாகனம் ஓட்டியதாக சம்பந்தப்பட்ட சிறுவர்களின் பெற்றோர் 12 பேரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மோட்டார் வாகன சட்டப்பிரிவு 199 ஏ பிரிவின் கீழ் கைது செய்துள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தை சிறுவர்கள் ஓட்டினாலும் வாகனத்தின் உரிமையாளர் அல்லது சிறுவர்களின் பெற்றோரே விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். சிறுவர்கள் விபத்தை ஏற்படுத்தி உயிரிழப்பு நேர்ந்தால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் அல்லது விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் பெற்றோருக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் நீதிமன்றம் மூலம் கட்டாயம் தண்டனை கிடைக்கும் வகையில் புதிய மோட்டர் வாகன சட்டம் வழிவகை செய்கிறது.

எனவே வரும் ஜூன் முதல் வாரத்தில், கோடை விடுமுறை முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படுகிறது. இதனால் பெற்றோர்கள் தங்களது 18 வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு இருசக்கர வாகனமோ அல்லது காரையோ ஓட்ட அனுமதிக்க கூடாது என்று போக்குவரத்து போலீசார் சார்பில் அனைத்து பள்ளி முதல்வர்கள் வாயிலாக பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும், அதையும் மீறி 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதித்தால் சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும் என போலீசார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

பெருநகர காவல் எல்லையில் 105 சட்டம் ஒழுங்கு காவல் நிலைய போலீசார், தங்களது காவல் எல்லையில் அடிக்கடி வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இதனால் வாகன சோதனையின் போது சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கண்டறிந்தால், சம்பந்தப்பட்ட சிறுவனின் பெற்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்படுத்தினால் கட்டாயம் கைது….
விபத்து ஏற்படுத்தியவர் யாராக இருந்தாலும் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரோ அல்லது சிறுவனின் பெற்றோர் கட்டாயம் கைது செய்யப்படுவார்கள் என்று போக்குவரத்து உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12 விபத்துக்களிலும் 14 வயது முதல் 17 வயதுக்குபட்டவர்கள்தான் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதனால் இதுபோன்ற விபத்துக்கள் இனி வரும் காலங்களில் நடைபெறுவதை தடுக்கும் வகையில், சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து போலீசாருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

The post கடந்த 4 மாதத்தில் சென்னையில் சிறுவர்கள் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக 12 பெற்றோர்கள் கைது appeared first on Dinakaran.

Read Entire Article