சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கியதற்காக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: எனது தலைமையிலான அதிமுக ஆட்சியில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டதால்தான் குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிடைத்துள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை: அரசியல்வாதிகளால் தாங்கள் காப்பற்றப்படுவோம் என்று நினைத்திருந்த குற்றவாளிகளுக்கு சவுக்கடி கொடுத்திருக்கிறது நீதிமன்றத்தித்தின் இந்த தீர்ப்பு. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் இருந்து நமது சமூகத்தைப் பாதுகாப்பதற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
பாஜ தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன்: பெண்கள் பாதுகாப்பை உருக்குலைக்கும் குற்றாவாளிகள் நீதியின் பிடியில் இருந்து என்றும் தப்பிக்க முடியாது என்பதை ஆணித்தரமாக உணர்த்தும் விதமாக இத்தீர்ப்பு அமைந்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய நீதிமன்றத்திற்கு நன்றி.
பாமக தலைவர் அன்புமணி: பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மிகக்கடுமையான எச்சரிக்கை விடுக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன்: போராடும் பெண்களுக்கு வாளும், கேடயமுமாக உதவி சிறப்புப் பெறும் இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமகிழ்ச்சியுடன் வரவேற்கிறது.
சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம்: பாதிக்கப்பட்ட பெண்கள் வழக்கின் இறுதிக் கட்டம் வரை உறுதியாக நின்று, சவால்களை எதிர்கொண்டு உறுதியாக சாட்சியம் அளித்தது போற்றுதலுக்குரியதாகும்.
தமாக தலைவர் ஜி.கே.வாசன்: இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்கக்கூடாது என்ற ரீதியில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: கோவை மகளிர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட முயற்சிக்கும் ஒவ்வொருவருக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை மணி.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விசாரணை துரிதமாக நடைபெற்றது. இந்த வழக்கினை சரியான முறையில் கையாண்ட அரசு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் மனவலிமையுடன் சாட்சி சொன்ன நம்பிக்கையோடு போராடிய அத்தனை பெண்களும் பாராட்டுக்குரியவர்கள்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்: இந்திய நீதித்துறையின் உறுதியை வெளிப்படுத்தும் இந்தத் தீர்ப்பு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்திற்கு முக்கிய மைல்கல்லாகும்.
தவெக தலைவர் விஜய்: இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட அனைவரும் மன தைரியத்தோடு இந்த வழக்கை எதிர்கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளனர். அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா: குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு அனைவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது வரவேற்கத்தக்க ஒரு விஷயம். அதுமட்டும் இல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுவதாக அறிவிப்பும் நீதிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கை ஒரு உதாரணமாக எடுத்து கொண்டு இனி வருங்காலங்களில் இளைஞர்கள் இது போன்ற தவறுகளை செய்யாமல் கண்ணியதோடு இருக்க வேண்டும் என்பதற்கு இந்த தீர்ப்பு சான்றாக இருக்கிறது.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்புக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு appeared first on Dinakaran.