திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் கூடுதல் கட்டிடம்: எம்பி, எம்எல்ஏக்கள் ஆய்வு

2 months ago 7

திருவொற்றியூர்: திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் தெரு அருகே அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். தலைமை மருத்துவர் மனோஜ்குமார் தலைமையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கு, மகப்பேறு, கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல்வேறு நோய்களுக்கு அலோபதி மற்றும் சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன் போன்ற வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்று மருத்துவர்களும், நோயாளிகளும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், சென்னை காமராஜர் துறைமுகத்தின் சி.எஸ்.ஆர். நிதியிலிருந்து ரூ.5 கோடி மதிப்பில் இந்த மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் மற்றும் மருத்துவ உபகரணங்கள், மணலி சி.பி.சி.எல். நிறுவன சி.எஸ்.ஆர். நிதி ரூ.2 கோடி மதிப்பீட்டில் எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் புதிய மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கலாநிதி வீராசாமி எம்பி, எம்எல்ஏக்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு ஆகியோர் நேற்று இந்த மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அப்போது மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம், மருத்துவ வசதிகளின் தேவைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். இதில் திமுக மாவட்ட அவைத்தலைவர் குறிஞ்சி கணேசன், பகுதி செயலாளர் வை.ம.அருள்தாசன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post திருவொற்றியூர் அரசு மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் கூடுதல் கட்டிடம்: எம்பி, எம்எல்ஏக்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article