சீர்காழி,ஜன.31: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு 59 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 15 ஆயிரத்து 902 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் தெரிவத்ததாவது: மக்கள் தொடர்பு முகாமானது மக்களை சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்காகவே நடத்தப்படுகிறது. ஒரு கிராமத்திற்கு சென்று, அந்த கிராமத்தில் இருக்கக்கூடிய மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக மக்களின் மனுக்களுக்கு தீர்வு காணப்படும்.
அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடையும் வகையில் இத்திட்டம் செயல்பட்டு கொண்டிருக்கின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, அரசின் பல்வேறு திட்டங்கள் பல்வேறு துறைகளின் திட்டங்கள் என்னென்ன இருக்கின்றது, அது எவ்வாறு செயல்படுகின்றது, அதை எப்படி பெறுவது, இதை அனைத்தையும் காட்சிப்படுத்தும் விதமாகவும் வேளாண்மைத்துறை, சமூகநலத்துறை, சுகாதாரத்துறை, தோட்டக்கலைத்துறை, குழந்தைகள் வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகள் திட்ட விளக்க அரங்குகளும் அமைத்துள்ளது.
இந்த மக்கள் தொடர்பு முகாமானது மாதம் ஒரு முறை ஒரு தாலுகாவில் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து, முடிந்தளவிற்கு மக்கள் பிரதிநிதி முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. அரசை தேடி மக்கள் என்ற நிலை மாறி, மக்களை தேடி தமிழ்நாடு அரசே முன்வந்து மக்களின் கோரிக்கைகளை பெற்று தீர்வு காணும் வகையில் தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இம்முகாமில் 59 பயனாளிகளுக்கு ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் ரூ.14 லட்சத்து 15 ஆயிரத்து 902 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் உமாமகேஷ்வரி, துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், சீர்காழி தாசில்தார் அருள்ஜோதி மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post திருவெண்காடு ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் R14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் appeared first on Dinakaran.