திருவாரூரில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'ரோடு ஷோ'

6 hours ago 2

திருவாரூர்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று திருவாரூக்கு சென்றார். சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானத்தில் புறப்பட்டு திருச்சி சென்று அங்கிருந்து கார் மூலம் திருவாரூர் அருகே காட்டூரில் உள்ள கலைஞர் கோட்டத்திற்கு வந்தடைந்தார். அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.

பின்னர் மாலை அங்கிருந்து புறப்பட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பவித்திரமாணிக்கம், துர்க்காலயா ரோடு, தெற்கு வீதி, பனகல் சாலை, பழைய பஸ் நிலையம், ரெயில்வே ரவுண்டானா வரை 'ரோடு ஷோ' மூலம் சாலையில் நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் ரெயில்வே ரவுண்டானாவில் மாவட்ட தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் வெண்கல முழு உருவச்சிலையை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். முன்னதாக கலைஞர் கோட்டத்தில் உள்ள நூலகம், அருங்காட்சியகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார். கலைஞரின் தாயார் அஞ்சுகம் அம்மையாரின் நினைவிடத்திலும் முதல்-அமைச்சர் மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

நாளை (வியாழக்கிழமை) சன்னதி தெருவில் இருந்து காரில் புறப்பட்டு, புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள எஸ்.எஸ். நகரில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முடிவுற்ற பணிகளை தொடங்கி வைக்கிறார். புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அதனை தொடர்ந்து பல்வேறு துறை சார்பில் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சை வழியாக திருச்சி சென்று, அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Read Entire Article