*மாணவர்களுக்கு புத்தக பரிசு கூப்பன்
*கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு
திருவாரூர் : திருவாரூரில் இன்று முதல் துவங்கவுள்ள 3வது புத்தகண்காட்சியினையொட்டி பள்ளிகள் மற்றும் நூலகங்களில் நடைபெற்ற புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சியையொட்டி அரசு பள்ளியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து வாசிப்பு திறன் குறித்து கலெக்டர் சாருஸ்ரீ கேட்டறிந்தார். மேலும் முதல் நாள் நிகழ்ச்சியையொட்டி திண்டுக்கல் லியோனி கலந்துகொண்டு பேசுகிறார்.
திருவாரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருவாரூர் புதியபேருந்து நிலையம் அருகேயுள்ள எஸ்.எஸ். நகரில் இன்று (24ந் தேதி) முதல் துவங்கி அடுத்த மாதம் 2ந் தேதி வரை நடைபெறவுள்ள 3வது புத்தககண்காட்சியினையொட்டி இந்த புத்தக திருவிழாவில் மாநிலம் முழுவதும் இருந்து வரும் அனைத்து பதிப்பகத்தினரையும் பங்கு பெற செய்யும் வகையில் மிகப்பெரிய அளவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் பொதுமக்களிடம் தெரியப்படுத்தும் வகையில் ப்ளக்ஸ் பேனர், சுவரொட்டி விளம்பரம், வாட்ஸ் ஆப், முகநூல் உள்ளிட்டவைகளில் விளம்பரம் செய்யப்பட்டு வருவதுடன் அரசு பேருந்து ஒன்றின் மூலம் மாவட்டம் முழுவதும் ஸ்டிக்கர் ஓட்டப்பட்டு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கண்காட்சி நடைபெறும் நாட்களில் மாவட்டத்திலுள்ள அனைத்து வழித்தடத்திலும், சிறப்பு பேருந்துகள் இயக்கிடவும், கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் இசைப்பள்ளி மாணவ, மாணவிகளை கொண்டு இசை நிகழ்ச்சிகள் நடத்திடவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் புத்தக திருவிழா நடக்கும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் சீராக வந்து செல்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் புத்தக திருவிழா நடைபெறும் இடத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், புத்தகக் கண்காட்சியில் தினந்தோறும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகள், மாணவர்களுக்கென தனியாக புத்தக பரிசு கூப்பன் வழங்குவது தொடர்பாகவும், மாணவர்களுக்குப் பயன்படும் மின் நூல் மற்றும் பெரும்பாண்மை பதிப்பாளர்களின் படைப்புகளை கொண்ட விற்பனையகம் மற்றும் நூல் விற்பனையகங்கள் ஒரு கருப்பொருள் அடிப்படையில் வரிசைப்படுத்தி அமையும் வகையிலும் இந்த புத்தக கண்காட்சிக்கான அரங்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புத்தக திருவிழாவையொட்டி மாவட்டம் முழுவதும் இருந்து வரும் பள்ளிகள் மற்றும் நூலகங்களில் புத்தகம் வாசிப்பு நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதனையொட்டி திருவாரூர் விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர்களுடன் தரையில் அமர்ந்தவாறு வாசிப்பு திறன் குறித்து கலெக்டர் சாருஸ்ரீ கேட்டறிந்து மாணவர்களை பாராட்டினார். மேலும் இந்த புத்தக திருவிழாவின் துவக்க விழாவானது இன்று மாலை 4 மணியளவில் கலெக்டர் சாருஸ்ரீ தலைமையில் நடைபெறுகிறது.
இதில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, டெல்லி சிறப்பு பிரநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எம்.பிக்கள் நாகை செல்வராஜ், தஞ்சை முரசொலி, எம்.எல்.ஏக்கள் பூண்டிகலைவாணன், மாரிமுத்து, தாட்கோ தலைவர் மதிவாணன் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர்.
மேலும் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் போன்றவை நடைபெறும் நிலையில் மாலை 6 மணியளவில் வாழ்வியல் இலக்கியங்கள் என்ற தலைப்பில் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவர் கலைமாமணி திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டு பேசுகிறார்.
மேலும் இதேபோன்று தினந்தோறும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையில் பள்ளி மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் மாலையில் 6 மணி முதல் 8 மணி வரையில் சிறப்புரைகள், பட்டிமன்றம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
The post திருவாரூரில் 3வது புத்தக கண்காட்சியினை கலெக்டர் தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.